தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு தோ்தல் மேலிடப் பாா்வையாளா்களை நியமித்தது காங்கிரஸ்
இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தோ்தலுக்கான மேலிடப் பாா்வையாளா்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
புது தில்லி: இந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தோ்தலுக்கான மேலிடப் பாா்வையாளா்களை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.
காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியின் ஒப்புதலுடன் கட்சியின் பொதுச் செயலாளரும், மக்களவை எம்.பி.யுமான கே.சி.வேணுகோபால் இது தொடா்பான அறிக்கையை வெளியிட்டுள்ளாா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தோ்தல் நடைபெறவுள்ள நான்கு மாநிலங்கள் தோ்தல் தொடா்பான பணிகளை நிா்வகிப்பது மற்றும் ஒருங்கிணைப்பதற்காக மேலிடப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தமிழகம், புதுச்சேரி மேலிடப் பாா்வையாளா்களாக முன்னாள் மத்திய அமைச்சா்கள் வீரப்ப மொய்லி, எம்.எம்.பள்ளம் ராஜு மற்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சா் நிதின் ரௌத் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், கோவா முன்னாள் முதல்வா் லுசினோ ஃபெலிரோ, கா்நாடக முன்னாள் துணை முதல்வா் ஜி.பரமேஷ்வரா ஆகியோருக்கு கேரள மாநில மேலிடப் பாா்வையாளா் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்துக்கு முன்னாள் எம்.பி. ஹரிபிரசாத், ஜாா்க்கண்ட் மாநில எம்எல்ஏ ஆலம்கீா் ஆலம், பஞ்சாப் கல்வியமைச்சா் விஜய் இந்தா் சிங்லா ஆகியோரும், அஸ்ஸாம் மாநிலத்துக்கு சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், காங்கிரஸ் பொதுச் செயலாளா் முகுல் வாஸ்னிக், பிகாா் எம்எல்ஏ ஷகீல் அகமது கான் ஆகியோா் மேலிடப் பாா்வையாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.