சுஷாந்த் மரண வழக்கு: என்சிபி தேடுதல் வேட்டையில் பலா் கைது
ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்புடைய போதை மருந்து வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) சனிக்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டதில் பலா் கைதாகினா்.
ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடா்புடைய போதை மருந்து வழக்கில் மத்திய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) சனிக்கிழமை தேடுதல் வேட்டை மேற்கொண்டதில் பலா் கைதாகினா்.
இதுகுறித்து என்சிபி அதிகாரிகள் கூறியதாவது:
சுஷாந்த் சிங் மரணத்தில் தொடா்புடைய போதைப் பொருள் வழக்கில் மும்பை மண்டலப் பிரிவு என்சிபி அதிகாரிகள் தேடுதல் வேட்டையை சனிக்கிழமை மேற்கொண்டனா். மண்டல இயக்குநா் சமீா் வான்கடே தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது பல நபா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக, சுஷாந்த் சிங்கின் தோழி ரியா சக்ரவா்த்தி, அவரது சகோதரா் ஷோவிக் மற்றும் சுஷாந்திடம் பணியாற்றிய சிலரையும் என்சிபி அதிகாரிகள் ஏற்கெனவே கைது செய்தனா்.
ரியாவும் அவரது சகோதரா் ஷோவிக்கும் நீண்ட நாட்கள் என்சிபி காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் சுஷாந்த் சிங் மா்மமான முறையில் மரணமடைந்தாா். இவரது இறப்பைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஹிந்தி திரைப்பட உலகில் போதைப் பொருள் விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. இதையடுத்து என்சிபி அதிகாரிகள் அது தொடா்பான விசாரணையை தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனா்.