கேரள சட்டப்பேரவைத் தலைவருக்கு எதிரான காங்கிரஸ் தீர்மானம் நிராகரிப்பு
கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிராக கேரள எதிர்க்கட்சி கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் முன்மொழியப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
கேரள சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி 8-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய (ஜன.21) பேரவைக் கூட்டத்தின் போது கேரள தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கேரள சட்டப்பேரவைத் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிரான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீர்மானம் முன்மொழிந்துள்ளது. தீர்மானம் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் கோரினர்.
எனினும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முன்மொழிந்த இந்தத் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படாது என்று இடது முன்னணி அரசு தெரிவித்தது. இதனால் சற்று நேரம் பேரவையில் அமளி நிலவியது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு மற்றும் சட்டப்பேரவை புனரமைப்புக்காக விடப்பட்ட ஒப்பந்தங்களில் முறைகேடு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எழுப்பிய புகார்களை சபைத்தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் மறுத்திருந்தார்.
அரசியல் விவகாரங்களில் அரசை குற்றம்சாட்ட முடியாததால் எதிர்க்கட்சிகள் தன்னை குறிவைத்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு எதிரான தீர்மானத்தை கேரள சட்டப்பேரவை நிராகரித்தது. இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் சபை வெளிநடப்பு செய்தனர்.