தேக்கடியில் படகு சவாரி கட்டண உயர்வு: சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி
தேக்கடியில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரிக்கு கட்டணத்தை அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்லாமல் திரும்புகின்றனர்.
தேக்கடியில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில், படகு சவாரிக்கு கட்டணத்தை அதிகரித்துள்ளதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்லாமல் திரும்புகின்றனர்.
கரோனா தொற்றால் இடுக்கி மாவட்டத்தில் பலமாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட சுற்றுலா திட்டங்கள் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. இதையடுத்து தேக்கடி வரும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஆனால் அதே நேரம் கேரள வனத்துறையும், கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் தேக்கடி படகுச்சவாரிக்கு 255 ரூபாயாக இருந்த டிக்கெட் கட்டணத்தை ரூபாய் 385 ஆகவும், நுழைவுக் கட்டணத்தை ரூபாய் 40 லிருந்து ரூபாய் 70 ஆகவும் உயர்த்தி உள்ளது. இதனால் நடுத்தர வர்க்க சுற்றுலாப் பயணிகள் படகு சவாரிக்கு மட்டும் சுமார் ரூ 500 செலவிட வேண்டி உள்ளது.
கரோனா தொற்றால் பாதிப்படைந்த தேக்கடியில் சுற்றுலா தொழில் செய்யும் சிறிய தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் முதல் தனியார் துறையில் உள்ள பெரிய ரிசார்ட்ஸ் வரை பெரும் கட்டண சலுகைகளை அறிவித்துள்ள நிலையில், கேரள வனத்துறையும், கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் படகு கட்டணத்தை உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, படகுச்சவாரி செல்லாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரும்புகின்றனர்.