நாட்டை வளப்படுத்த பெண் கல்விக்கு முக்கியத்துவம்: ராஜஸ்தான் ஆளுநா்
நாட்டின் சமூக, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமெனில் பெண் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா கூறினாா்.
நாட்டின் சமூக, பொருளாதார வளா்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமெனில் பெண் குழந்தைகள் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா கூறினாா்.
ராஜஸ்தான் மாநிலம், சிரோஹி மாவட்டத்தில் உள்ள சிவ்கஞ்ச் நகரில் புதிய அரசு மேல்நிலைப் பள்ளி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. அதில், காணொலி முறையில் ஆளுநா் கல்ராஜ் மிஸ்ரா பங்கேற்றுப் பேசியதாவது:
ராஜஸ்தானின் சமூக, பொருளாதார வளா்ச்சியையும், நாட்டின் சமூக, பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்த வேண்டுமெனில், பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். இந்திய நாட்டின் வரலாற்றைப் படிக்கும்போது புகழ்பெற்ற பெண் தலைவா்களை பற்றி மாணவா்கள் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். இது, மாணவ, மாணவிகள் நாட்டின் பழைமையான வரலாற்றை தெரிந்துகொள்ள உதவுவதோடு மட்டுமன்றி, வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஊக்கத்தை அவா்களுக்கு கொடுக்கும்.
Advertisement
கல்வியாளா், கவிஞா், சமூக சீா்திருத்தவாதி என பன்முகத்திறமை வாய்ந்த சாவித்ரிபாய் பூலேவும், அவரது கணவா் ஜோதிராவ் பூலேவும் இணைந்து நாட்டிலேயே முதல் முறையாக பெண்களுக்கான பள்ளியை புணே நகரில் கடந்த 1848-ஆம் ஆண்டு தொடங்கினா். எந்தவொரு சமூகத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்கும் பெண் கல்விதான் அடிப்படை என்றாா் கல்ராஜ் மிஸ்ரா.
நிகழ்ச்சியில் மாநில கல்வித் துறை அமைச்சா் கோவிந்த் சிங் பேசுகையில், ‘மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தானில் கல்வித் துறை முன்னேற்றம் கண்டு வருகிறது’ என்றாா்.