பாஜக-சிவசேனை உறவு ஆமிர் கான், கிரண் ராவைப் போன்றது: சஞ்சய் ரௌத்
பாஜக, சிவசேனை இடையிலான உறவை சமீபத்தில் பிரிந்து வாழ்வதாக அறிவித்த நடிகர் ஆமிர் கான், கிரண் ராவ் உறவுடன் ஒப்பிட்டு சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
பாஜக, சிவசேனை இடையிலான உறவை சமீபத்தில் பிரிந்து வாழ்வதாக அறிவித்த நடிகர் ஆமிர் கான், கிரண் ராவ் உறவுடன் ஒப்பிட்டு சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆமிர் கானும், கிரண் ராவும் கணவன்-மனைவியாக அல்லாமல் இணை பெற்றோராக இருக்க முடிவு செய்துள்ளதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தனர். சிவசேனை-பாஜக உறவை இதனுடன் ஒப்பிட்டே சஞ்சய் ரௌத் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சஞ்சய் ரௌத் திங்கள்கிழமை கூறுகையில், "நாங்கள் (பாஜக-சிவசேனை) இந்தியா-பாகிஸ்தான் அல்ல. ஆமிர் கான் மற்றும் கிரண் ராவைப் பாருங்கள். நாங்கள் அவர்களைப் போன்றவர்கள். அரசியல் பாதையில் வெவ்வேறானவர்கள். ஆனால், நட்பு அப்படியே தொடரும்" என்றார்.
முன்னதாக, பாஜகவும் சிவசேனையும் எதிரிகள் அல்ல மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃப்டனவீஸ் என ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் ஃபட்னவீஸ் மேலும் கூறியது:
"சிவசேனையுடன் சில வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் நாங்கள் எதிரிகள் அல்ல. சிவசேனை எங்களுடன் கைகோர்த்துதான் தேர்தலை எதிர்கொண்டது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். பிறகுதான் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்தது."
இதற்கு எதிர்வினையாற்றும் வகையிலேயே பாஜக-சிவசேனை உறவை ஆமிர் கான், கிரண் ராவ் உறவுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார் சஞ்சய் ரௌத்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சஞ்சய் ரௌத்தின் இந்தக் கருத்து கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இருந்தபோதிலும் சிவசேனை, பாஜக கூட்டணி மீண்டும் இணைந்து ஆட்சியமைக்காது என பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
ஃபட்னவீஸ் கருத்து பற்றி பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் தெரிவித்தது:
"பாஜகவும் சிவசேனையும் எதிரிகள் அல்ல என்று தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். அது 100 சதவிகிதம் உண்மை. அதற்காக நாங்கள் கைகோர்த்து ஆட்சியமைப்போம் என்று அர்த்தமல்ல" என்றார்.