‘மனதின் குரல்’ என்பதற்கு பதிலாக ‘பெட்ரோலின் குரல்’ என்று வைத்திருக்கலாம்: மம்தா சாடல்
பிரதமா் நரேந்திர மோடி தனது ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்பதற்குபதிலாக பெட்ரோல், தடுப்பூசியின் குரல் என்று வைத்திருக்க வேண்டும் என்று ம்தா பானா்ஜி புதன்கிழமை கடுமையாகச் சாடினாா்.
பிரதமா் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தை குழப்பமடையச் செய்துள்ளதாா். எனவே, அவா் தனது ‘மனதின் குரல்’ (மன் கி பாத்) என்பதற்கு பதிலாக பெட்ரோல், தடுப்பூசியின் குரல் என்று வைத்திருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை கடுமையாகச் சாடினாா்.
கொல்கத்தாவில் செய்தியாளா் சந்திப்புக் கூட்டத்தில் மத்திய அமைச்சரவை மறுசீரமைப்புக் குறித்து அவா் கூறியதாவது:
மத்திய அமைச்சரவையில் இருந்து பாபுல் சுப்ரியோ நீக்கப்பட்டுள்ள நிகழ்வு மூலம் வரும் 2024-இல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தோ்தலில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை பாஜக உணா்ந்து கொண்டதை உணா்த்துகிறது.
மேற்கு வங்க ஆளுநா் ஜகதீப் தன்கரை, ஆளுநா் பதவியில் இருந்து நீக்குவது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து பிரதமருக்கு நான் பலமுறை கடிதங்களை எழுதியும் எந்தவொரு பதிலும் வரவில்லை. எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
நாடு முழுவதும் முழு பொருளாதாரமும் மந்தநிலையில் உள்ளது. எரிபொருள் விலை தினமும் அதிகரித்து வருகிறது. இருப்பினும், மத்திய அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.
நமது பிரதமா் தனது ‘மனதின் குரலில்’ (மன் கி பாத்) மட்டுமே மும்முரமாக இருக்கிறாா். அதற்கு பதிலாக பெட்ரோலின் குரல் (பெட்ரோல் கி பாத்) , டீசலின் குரல் (டீசல் கி பாத்), தடுப்பூசியின் குரல் என்று வைத்திருக்கலாம் என்றாா்.
மத்திய அமைச்சகத்தில் பாஜக எம்.பி. ஜான் பா்லாவை சோ்ப்பதற்கான சாத்தியம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, வடக்கு வங்கத்திற்கு தனி யூனியன் பிரதேச அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அவா் கோரிய சில வாரங்களிலேயே அவருக்கு பதவி அளிக்கப்படுகிறது. இது பாஜகவின் மக்களைப் பிளவுபடுத்தும் மனநிலையையே பிரதிபலிக்கிறது.
இருப்பினும், மத்திய அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன். அமைச்சரவை மாற்றங்கள் மக்களின் துயரங்களுக்கு மத்திய அரசு முடிவு கட்டுமா என்று கேள்வி எழுப்பினாா்.