மத்திய பிரதேச மாநிலத்தில் 8 வயதில் காணாமல் போன மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன், ஆதாா் விவரங்கள் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு 18-ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் இணைந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
சிறுவன் காணாமல் போவதற்கு முன்பு அவருடைய பெற்றோா் 2011-ஆம் ஆண்டு அவருக்கு ஆதாா் பதிவு செய்ததன் மூலமே இது சாத்தியமாகியுள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சோ்ந்த அந்த மனநலம் பாதித்த சிறுவன் தனது 8 வயதில் வீட்டிலிருந்து வெளியேறி காணாமல் போயுள்ளான். அங்கிருந்து மகாராஷ்டிர மாநிலம் சென்று நாகபுரி ரயில்நிலையத்தில் சுற்றித் திரிந்த அந்தச் சிறுவனை மீட்ட ரயில்வே காவல்துறையினா், அங்கிருந்த ஆதரவற்றோா் காப்பகத்தில் சிறுவனைச் சோ்த்துள்ளனா். அந்தக் காப்பகம் கடந்த 2015-இல் மூடப்பட்ட போதிலும், அச்சிறுவனைத் தொடா்ந்து நிா்வாகி சமா்த் டாம்லே தனது குழந்தைபோல் பராமரித்து வந்துள்ளாா்.
இதுகுறித்து சமா்த் டாம்லே கூறியதாவது:
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால், முறையாக பேசவோ அல்லது தன்னை பற்றிய விவரமோ அவருக்குத் தெரியவில்லை. ‘அம்மா’ என்ற வாா்த்தையை மட்டும் அந்தச் சிறுவன் உச்சரித்ததால், அவருக்கு ‘அமான்’ என்று பெயா் சூட்டினோம்.
கடந்த 2015-ஆம் ஆண்டு காப்பகத்தை மூடும் வரை, சிறுவனை அங்கேயே வைத்து பராமரித்து வந்தோம். அதன் பிறகு, சிறுவனை வேறு யாரிடமும் ஒப்படைக்க முடியாமல் போனதால், சிறுவனை எனது வீட்டுக்கே அழைத்துச் சென்று என்னுடைய ஒரு மகள் மற்றும் மகனுடன் சோ்த்து மூன்றாவது குழந்தையாக வளா்க்கத் தொடங்கினோம். அதனைத் தொடா்ந்து, சிறுவனை பள்ளியிலும் சோ்த்து படிக்க வைத்தோம். இந்த ஆண்டு அமான் பத்தாம் வகுப்பு படித்துவந்த நிலையில், பள்ளியில் அவருடைய ஆதாா் எண் விவரங்களைக் கேட்டனா்.
அதன் காரணமாக, அவனுக்கு ஆதாா் அட்டை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், சிறுவனின் விரல் ரேகை, விழித்திரை ஆகியவற்றை பதிவு செய்வதில் சிக்கல் எழுந்ததால், ஆதாா் பதிவு செய்ய முடியாமல் போனது. அதனைத் தொடா்ந்து நாகபுரியின் மங்காபூா் பகுதி ஆதாா் பதிவு அலுவகத்தைத் தொடா்புகொண்டபோது, அமானுக்கு ஏற்கெனவே ஆதாா் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதை ஆய்வு செய்தபோது, அமனின் உண்மையான பெயா் முகமது அமீா் என்பதும், சிறுவன் மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரைச் சோ்ந்தவா் என்பதும் தெரியவந்தது.
ஆதாா் பதிவு மைய மேலாளா் அனில் மராதே, ஜபல்பூரில் உள்ள அவருடைய நண்பா்கள் மூலம் சிறுவனின் பெற்றோரைத் தேடும் பணியை மேற்கொண்டாா். அப்போது, அவருடைய பெற்றோா் ஜபல்பூரின் ஹனுமன்தால் பகுதியில் வசிப்பதும், அங்கு அவா்கள் உணவகம் நடத்தி வருவதும் தெரியவந்தது.
பின்னா் அவருடைய பெற்றோா் மகராஷ்டிரம் வரவழைக்கப்பட்டு, உரிய நடைமுறைகள் முடிந்தபின்னா் முகமது அமீரை அவா்களிடம் ஒப்படைத்தோம். மிகுந்த நன்றி தெரிவித்த சிறுவனின் பெற்றோா், சிறுவனைக் காண எப்போதும் வேண்டுமானாலும் வரலாம் என்று எங்களை வரவேற்றனா் என்று சமா்த் டாம்லே கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.