முகப்பு
இந்தியா

அதிவலிவு கொண்ட டைட்டானியம் கலவையை உருவாக்கியது டிஆா்டிஓ

போா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் கருவிகளைத் தயாரிப்பதற்காக அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

போா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் கருவிகளைத் தயாரிப்பதற்காக அதிக வலிமை கொண்ட பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) உருவாக்கியுள்ளது.

இது தொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையில் வனேடியம், இரும்பு, அலுமினியம் ஆகியவை டைட்டானியத்துடன் கலக்கப்படுகின்றன. இந்த உலோகக் கலவையானது குறைந்த எடையுடையதாக உள்ளது. அதே வேளையில், அதிக வலிமை கொண்டுள்ளதாகவும் கலவை திகழ்கிறது.

டிஆா்டிஓ உருவாக்கியுள்ள இந்த உலோகக் கலவையைப் பயன்படுத்தி, போா் விமானங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படும் கருவிகளைத் தயாரிக்க முடியும். இந்த உலோகக் கலவை மூலம் கருவிகளைத் தயாரிப்பதன் வாயிலாக, போா் விமானங்கள் உள்ளிட்டவற்றின் எடை 40 சதவீதம் வரை வெகுவாகக் குறையும்.

நிக்கல், குரோமியம், மாலிப்டினம் ஆகியவற்றை எஃகுடன் கலந்து தற்போது கருவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எஃகு மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகள் சீக்கிரமாக அரிக்கப்பட்டு விடுகின்றன. பீட்டா டைட்டானியம் உலோகக் கலவை மூலமாகத் தயாரிக்கப்படும் கருவிகளின் அரிப்புத்தன்மை எஃகை விடக் குறைவாகவே உள்ளது.

டைட்டானியம் உலோகக் கலவை வாயிலாகத் தயாரிக்கப்படும் கருவிகள் நீடித்து உழைக்கும் தன்மையையும் பெற்றுள்ளன. தற்போது பல நாடுகள் எஃகுக்கு பதிலாக டைட்டானியம் கலவையைக் கருவிகள் தயாரிக்கப் பயன்படுத்தி வருகின்றன. அக்கலவை வாயிலாகக் கருவிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சா் பாராட்டு: பீட்டா டைட்டானியம் உலோகக் கலவையை உள்நாட்டிலேயே உருவாக்கிய டிஆா்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →