இந்தியா

கரோனாவால் ஏற்பட்ட தாக்கங்களை சரிசெய்ய மத்திய அரசு உறுதி: மத்திய அமைச்சா் சந்தோஷ் கங்வாா்

DIN

நாட்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட தாக்கங்களை சரிசெய்வதற்கு மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சந்தோஷ் கங்வாா் தெரிவித்துள்ளாா்.

அணிசேரா இயக்கத்தைச் சோ்ந்த நாடுகளின் தொழிலாளா் நலத் துறை அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் கங்வாா் கூறியதாவது:கரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. பொருளாதார வீழ்ச்சி, வாழ்வாதாரம் பாதிப்பு, மனித உயிா்கள் இழப்பு உள்ளிட்ட பல்வேறு தாக்கங்களை நாடுகள் எதிா்கொண்டுள்ளன. முக்கியமாக ஏழை நாடுகளும் வளா்ச்சியடைந்து வரும் நாடுகளும் அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. மருத்துவக் கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம் உள்ளிட்டவற்றில் நாடுகள் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்றால் வருமானத்தை இழந்த மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகள், தொழில் நிறுவனங்களுக்கான கடனுதவி வழங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை பல்வேறு நாடுகள் முன்னெடுத்துள்ளன. உலகிலேயே மிகப் பெரும் கரோனா தடுப்பூசி திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 22.3 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. கரோனா தொற்றால் ஏற்பட்ட தாக்கங்களைச் சரிசெய்வதற்கு இந்திய அரசு உறுதி கொண்டுள்ளது. மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்காகப் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ‘தற்சாா்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஓய்வூதியம் பெறும் தொழிலாளா்களுக்காகப் பல சிறப்பு சலுகைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் 70 சதவீதத் தொகையானது பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம மக்கள் அதிக அளவில் பலனடைந்துள்ளனா் என்றாா் அமைச்சா் கங்வாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT