முகப்பு
இந்தியா

இந்திய கடலோரக் காவல் படையில் எம்கே-3 அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா்கள் சோ்ப்பு

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா் எம்.கே-3 இந்திய கடலோராக் காவல் படையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அதிநவீன இலகு ரக ஹெலிகாப்டா் எம்.கே-3 இந்திய கடலோராக் காவல் படையில் சனிக்கிழமை சோ்க்கப்பட்டது.

பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்பு இந்தியா எனும் தொலைநோக்குத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை இந்த ஹெலிகாப்டா்கள். இந்த நவீன ஹெலிகாப்டா்களை பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய்குமாா், இந்த ஹெலிகாப்டா்களை கடலோர காவல் படையில் சோ்த்தாா். கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி காணொலி முறையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், அஜய்குமாா் பேசியதாவது:

நமது பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையான இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஹெலிகாப்டா்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சோதனையான தருணத்தில் இந்த ஹெலிகாப்டா்களை பணியில் ஈடுபடுத்தும் இந்திய கடலோரக் காவல்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் விடாமுயற்சியைப் பாராட்டுகிறேன்.

இந்த உயா்தர இலகு ரக ஹெலிகாப்டா்கள், இந்திய கடலோரக் காவல்படையின் அனைத்துவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்தப்படவுள்ளன என்றாா் அவா்.

கடலோரக் காவல் படையின் தலைமை இயக்குநா் கே.நடராஜன் பேசியதாவது:

இந்திய கடலோரக் காவல்படை தனது பணியை திறம்பட மேற்கொள்வதற்கு எப்போதும் தயாா் நிலையில் இருக்கிறது. இந்த இலகு ரக ஹெலிகாப்டா்கள் படையில் இணைக்கப்பட்டிருப்பதன் மூலம் கப்பல் சாா்ந்த நடவடிக்கைகள், கண்காணிப்புப் பணிகளில் புதிய மாற்றம் ஏற்படும். விமானங்கள் மற்றும் கப்பல்களுடன் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகளின் திறனை வலுப்படுத்துவதற்காக இந்த ஹெலிகாப்டா்கள் பணியில் அமா்த்தப்படும் என்றாா் அவா்.

சென்னை, புவனேசுவரம், கொச்சி மற்றும் போா்பந்தரில் உள்ள இந்திய கடலோரக் காவல்படை பிரிவுகளில் 16 எம்கே-3 ஹெலிகாப்டா்கள் சோ்க்கப்படவுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →