தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி: புதிய சந்தாதாரர் எண்ணிக்கை ஏப்ரலில் 13.73% அதிகரிப்பு
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) செலுத்தும் புதிய சந்தாதாரர் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 13.73 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது தெரியவந்துள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்ஓ) செலுத்தும் புதிய சந்தாதாரர் எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதம் 13.73 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது தெரியவந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 11.22 லட்சமாக இருந்த ஒட்டுமொத்த புதிய சந்தாதாரர் சேர்க்கை எண்ணிக்கை ஏப்ரலில் 12.76 லட்சமாக உயர்ந்துள்ளது என்று இபிஎஃப்ஓ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சம்பள பட்டியல் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட இந்த புள்ளி விவரத்தில், கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே முறைசார்ந்த துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதைக் காட்டுகிறது.
இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்கட்ட புள்ளி விவரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் புதிதாக 12.76 லட்சம் சந்தாதாரர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 13.73 சதவீதம் கூடுதலாகும். கரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தலுக்கு இடையே இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
அதாவது, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையை கைவிட்டு செல்பவர்களின் எண்ணிக்கை 87,821-ஆக குறைந்து, வேலையில் மீண்டும் சேர்பவர்களின் எண்ணிக்கை 92,864-ஆக அதிகரித்துள்ளது.
ஒட்டுமொத்தமாக 2020-21-ஆம் ஆண்டில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் 77.08 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். முந்தைய ஆண்டில் இந்த எண்ணிக்கை 78.58 லட்சமாக இருந்தது.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஏப்ரலில் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை எதிர்மறை (-2,84,576) இலக்கத்தில் இருந்தது. அதாவது, திட்டத்தில் மீண்டும் இணைபவர்களைக் காட்டிலும், வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. பொது முடக்கத்தையடுத்து இந்த நிலை ஏற்பட்டது.
அதன் பிறகு பொதுமுடக்க தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதால், புதிய ஒட்டுமொத்த சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2021 ஏப்ரலில் 12.76 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் முதன் முறையாக 6.89 லட்சம் புதிய உறுப்பினர்கள் இபிஎஃப்ஓ சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வந்துள்ளனர்.
மாநிலங்களைப் பொருத்தவரை மகாராஷ்டிரம், ஹரியாணா, குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்கள் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கையில் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களில் ஏப்ரல் மாதத்தில் 7.58 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது ஒட்டுமொத்த புதிய சேர்க்கையில் 59.41 சதவீதமாகும். இதற்கு அடுத்தபடியாக வடகிழக்கு மாநிலங்கள் உள்ளன. இங்கு சராசரியைவிட கூடுதல் புதிய சந்தாதாரர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
பெண் இபிஎஃப்ஓ புதிய சந்தாதாரர்களைப் பொருத்தவரை, முதன் முறையாக 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்தில் 1.84 லட்சமாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.