தடுப்பூசி போடவில்லையெனில் சம்பளம் இல்லை: ம.பி.யில் ஆட்சியர் உத்தரவு
கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையெனில், அடுத்த மாதத்திலிருந்து ஊதியம் கிடையாது என மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா நோய்த் தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையெனில், அடுத்த மாதத்திலிருந்து ஊதியம் கிடையாது என மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தடுப்பூசிக்கான சான்றிதழைக் காண்பித்தாலே ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படும் என அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"ஜூலை 31-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையெனில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படாது. ஜூன் மாத ஊதியத்தை வழங்கும்போது அரசு ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தகவல்களை மாவட்ட கருவூல அலுவலர் சேகரித்து வைக்க வேண்டும்.
தினக்கூலிகள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட தகவல்களை துறைத் தலைவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் கரோனா மரணங்களை ஆராயும்போது அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது."
இந்த உத்தரவை உறுதிப்படுத்தி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆட்சியர் ஆஷிஷ் சிங், "மாவட்டத்தில் 100 சதவிகித தடுப்பூசி இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.