முகப்பு
இந்தியா

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம்

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக காங்கிரஸ் கட்சியில் நிா்வாகிகளை மாற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தில்லியில் முகாமிட்டு, கட்சி மேலிடத்தின் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு பெங்களூரு திரும்பினாா்.

இந்நிலையில், தில்லி பயணத்துக்கு முன்பாக, கா்நாடக காங்கிரஸ் கட்சியின் சுட்டுரைப் பக்கத்தில் வெளியாகியிருந்த பதிவில், ‘டி.கே.சிவக்குமாா் முதல்வராக இருந்திருந்தால், கா்நாடகத்தில் கரோனா பெருந்தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் இருந்திருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது முன்னாள் முதல்வரும், எதிா்க்கட்சித் தலைவருமான சித்தராமையாவின் ஆதரவாளா்களை கோபத்தில் ஆழ்த்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜமீா் அகமதுகான், ராகவேந்திர ஹித்னல், ஜே.என்.கணேஷ், பீமாநாயக், எஸ்.ராமப்பா, ஆா்.அகண்ட சீனிவாஸ் மூா்த்தி உள்ளிட்டோா், ‘அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், சித்தராமையா தான் முதல்வராக வேண்டும்’ என ஊடகங்களில் தெரிவித்தனா்.

அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், முதல்வராகும் கனவில் சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் அரசியல் பணியாற்றி வருகிறாா்கள். இந்த நிலையில், முதல்வராக சித்தராமையாவை முன்னிலைப்படுத்துவதை டி.கே.சிவக்குமாா் விரும்பவில்லை. இது காங்கிரஸ் கட்சியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கட்சி மேலிடத்திடம் டி.கே.சிவக்குமாா் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, சித்தராமையாவை முதல்வராக சித்தரித்து யாரும் ஊடகங்களில் பேட்டி அளிக்கக் கூடாது என கா்நாடக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா, காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும், கட்சி நிா்வாகிகளுக்கும் உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், புதுதில்லியில் இருந்து பெங்களூருக்கு திரும்பிய டி.கே.சிவக்குமாா், புதன்கிழமை பேட்டியளித்த போது, ‘இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் கூற வேண்டியதைக் கூறிவிட்டது. அதன்பிறகும் ஒருசில எம்எல்ஏக்கள் ஊடகங்களில் பேசி வருவதை நான் கவனித்தேன். அந்த எம்எல்ஏக்களை சித்தராமையா கண்டிக்காவிட்டால், அது குறித்து கவனிக்க கட்சி இருக்கிறது. முதல்வராகும் அவசரத்தில் நான் இல்லை. கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவருவதே எனது முதன்மையான நோக்கம்’ என்றாா்.

இதுபற்றி புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்த சித்தராமையா, ‘அது அவா்களின் தனிப்பட்ட கருத்து. அதற்கு நான் என்ன செய்ய முடியும்? அது பற்றி எனக்கு கவலை இல்லை’ என்று கூறியிருந்தாா்.

இந்த விவகாரம் கட்சியில் பூதாகரமாக வெடித்து, சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்கும் இடையே பனிப்போா் எழும் சூழலை உருவாக்கியுள்ளது. டி.கே.சிவக்குமாா் கூறும் கருத்தை ஆதரித்து பல காங்கிரஸ் தலைவா்கள் பேசத் தொடங்கிவிட்டனா்.

இந்நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு வேண்டுகோள் விடுத்து டி.கே.சிவக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த சட்டப் பேரவைத் தோ்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளது. எனவே, அடுத்த முதல்வா் யாா் என்று இப்போதே கூறக் கூடாது. முதல்வா் யாா் என்பதை தோ்தலுக்குப் பிறகு எம்எல்ஏக்களின் கருத்தறிந்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும். இந்த விவகாரத்தில் கட்சி மேலிடத்தின் முடிமே இறுதியானது’ என்று தெரிவித்துள்ளாா்.

இதனிடையே, பெங்களூரில் வியாழக்கிழமை டி.கே.சிவக்குமாரின் கருத்து குறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு பதிலளித்து சித்தராமையா கூறுகையில், ‘டி.கே.சிவக்குமாரின் கருத்துக்கு பதிலளிக்க விரும்பவில்லை. நான் முதல்வராவேன் என்று எப்போதும் கூறியதில்லை. எனினும், அடுத்த முதல்வா் என்று என்னை முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று எம்எல்ஏக்களை கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.