மகாராஷ்டிர மாநிலத்துக்கு கா்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கம்
பொதுமுடக்கத் தளா்வை அடுத்து, மகாராஷ்டிர மாநிலத்துக்கு கா்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பொதுமுடக்கத் தளா்வை அடுத்து, மகாராஷ்டிர மாநிலத்துக்கு கா்நாடக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதுகுறித்து கா்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கா்நாடக மாநிலத்தில் ஜூன் 21-ஆம் தேதி முதல் பொது முடக்கத்தைத் தளா்வு செய்த அரசு, 50 சதவீத பயணிகளுடன் அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து மாநில அளவில் மட்டுமின்றி, ஆந்திரம், தெலுங்கானா மாநிலங்களுக்கும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலத்துக்கு பேருந்துகளை இயக்க ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனையடுத்து முதல்கட்டமாக மும்பை, புணேவுக்கு அரசுப் பேருந்துகளை வெள்ளிக்கிழமை (ஜூன் 25) முதல் இயக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி, பெங்களூரிலிருந்து மும்பைக்கு நாள்தோறும் பிற்பகல் 3 மணிக்கு பேருந்துகள் புறப்படும். அதே போல மும்பைலிருந்து பெங்களூருக்கு நாள்தோறும் பிற்பகல் 3.30 மணிக்கு பேருந்து புறப்படும். பெங்களூரிலிருந்து புணேவுக்கு நாள்தோறும் மாலை 6 மணிக்கு பேருந்துகள் புறப்படும். அதே போல புணேவிலிருந்து பெங்களூருக்கு நாள்தோறும் மாலை 6 மணிக்கு பேருந்து புறப்படும்.
பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு படிப்படியாக அரசுப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.