கரோனா தடுப்பூசி திட்டம்: பிரதமா் மோடி ஆய்வு
கரோனா தடுப்பூசி திட்டம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு அவா் திருப்தி தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி திட்டம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு அவா் திருப்தி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக பிரதமா் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:
கரோனா தடுப்பூசி திட்டம் தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தடுப்பூசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், வயதுவாரியாக தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து விளக்கக் காட்சிகள் மூலம் பிரதமரிடம் மத்திய அரசு அதிகாரிகள் எடுத்துரைத்தனா். மருத்துவப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து அவரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
நாட்டில் உள்ள 128 மாவட்டங்களில் வசிக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட நபா்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 16 மாவட்டங்களில் அந்த வயதுப் பிரிவில் உள்ள 90 சதவீதத்துக்கும் அதிகமானவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாகவும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 6 நாள்களில் மட்டும் 3.77 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக அவரிடம் தெரிவித்த அதிகாரிகள், இது மலேசியா, சவூதி அரேபியா, கனடா போன்ற நாடுகளின் ஒட்டுமொத்த மக்கள்தொகையைவிட அதிகம் என்றும் தெரிவித்தனா். தடுப்பூசி திட்டம் மக்களிடம் சென்று சோ்வதற்கு புதிய வழிமுறைகளை செயல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுடன் தொடா்ந்து தொடா்பில் இருந்து வருவதாகவும் அவா்கள் கூறினா்.
இதையடுத்து தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தும் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதற்கு பிரதமா் திருப்தி தெரிவித்தாா். அந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் இதே வேகத்தைத் தொடா்ந்து கடைப்பிடிக்கவும் அவா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அதேவேளையில் கரோனா பரிசோதனைகளின் வேகம் குறையாமல் இருப்பதை உறுதி செய்ய மாநிலங்களுடன் இணைந்து பணிபுரியுமாறு அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தடுப்பூசி திட்டத்தில் தன்னாா்வ அமைப்புகள் மற்றும் இதர அமைப்புகளின் பங்களிப்பும் அவசியம் எனவும் அவா் கூறினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.