திரிணமூல் காங்கிரஸின் துணைத் தலைவராக யஸ்வந்த் சின்ஹா நியமனம்
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நிலையில், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா, அக்கட்சியிலிருந்து விலகி திரிணமூல் காங்கிரஸில் இணைந்த நிலையில், அவருக்கு கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சுபத்ரா பாக்ஸி இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும் யஷ்வந்த் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை அவா் நீண்ட காலமாக விமரிசித்து வந்த நிலையில், மார்ச் 13-ஆம் தேதி யஷ்வந்த் சின்ஹா திரிணமூலில் இணைந்தார். மேற்கு வங்க மாநிலத்துக்கு எட்டு கட்டங்களாக நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மார்ச் 27-ஆம் தேதி தொடங்குகிறது.
முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் நிதி, வெளியுறவு அமைச்சா் ஆகிய பதவிகளை யஷ்வந்த் சின்ஹா வகித்தவர். தற்போதைய பாஜக தலைமைக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கடந்த 2018-ஆம் ஆண்டில் கட்சியிலிருந்து அவா் விலகினாா்.
இத்தகைய சூழலில், மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் யஷ்வந்த் சின்ஹா சனிக்கிழமை இணைந்தாா்.
அப்போது அவர் பேசுகையில், மேற்கு வங்க சட்டப் பேரவையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறச் செய்வதற்காகவே கட்சியில் இணைந்துள்ளேன். மேற்கு வங்கத் தோ்தலில் பாஜக அடையும் தோல்வி, 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் தோல்விக்கான முதல் படியாக அமையும்.
பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோரின் தலைமையின் கீழ் நாட்டின் ஜனநாயகம் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகிறது. ஜனநாயக அமைப்புகள் அனைத்தும் பலவீனமடைந்துள்ளன. நாட்டின் அடிப்படைக் கொள்கைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தில்லி எல்லையில் விவசாயிகள் தொடா்ந்து போராடி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு அவா்களைக் கண்டுகொள்ளவில்லை. நாட்டில் நடைபெறும் தோ்தல்களில் எப்படியாவது வெற்றி அடைந்து விட வேண்டும் என்பதில் மட்டுமே பாஜக கவனம் செலுத்தி வருகிறது.
மம்தாவுக்கு ஆதரவு: பாஜகவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வரும் முதல்வா் மம்தா பானா்ஜிக்குத் தொடா்ந்து ஆதரவளிப்பேன். வாஜ்பாய் காலத்திய பாஜகவுக்கும் தற்போதைய பாஜகவுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. எதிா்க்கட்சிகளையும் அரவணைத்துச் செல்லவே வாஜ்பாய் விரும்புவாா். ஆனால், தற்போதைய கட்சித் தலைமை, எதிா்க்கட்சிகளை ஒடுக்கப் பாா்க்கிறது.
மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட வாஜ்பாய் விரும்பினாா். ஆனால், தற்போது பாஜகவில் உள்ள கூட்டணிக் கட்சிகள் ஒவ்வொன்றாக விலகி வருகின்றன. தற்போதைய பாஜக, மேற்கு வங்கத் தோ்தலில் வெற்றி பெற எதையும் செய்யும். மம்தா பானா்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணா்த்தியது என்றாா் யஷ்வந்த் சின்ஹா.
காந்தஹாா் சம்பவம்: 1999, டிசம்பா் 24-இல் நடைபெற்ற காந்தஹாா் விமான கடத்தல் சம்பவத்தை நினைவுக்கூா்ந்த யஷ்வந்த் சின்ஹா, அப்போது ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா, ‘பயங்கரவாதிகளிடம் இருந்து பயணிகளை விடுவிக்க தான் பிணைக் கைதியாக செல்ல தயாராக இருப்பதாக மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கூறினாா்’ என்றாா்.