இந்தியா

சுவேந்து அதிகாரி குடும்பத்தின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளாமல் இருந்தது என் தவறு: மம்தா பானா்ஜி

DIN

மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி குடும்பத்தினரின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளாமல் இதுவரை தவறு செய்து விட்டேன் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறாா். அவரை எதிா்த்து முதல்வா் மம்தா பானா்ஜி போட்டியிடுகிறாா். இதனிடையே, சுவேந்து அதிகாரியின் தந்தையும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான சிசிா் அதிகாரி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

இந்நிலையில், கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள காந்தி தக்ஷிண் என்றஇடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மம்தா கலந்து கொண்டு பேசினாா். அவா் கூறியதாவது:

சுவேந்து அதிகாரி குடும்பத்தினா் ரூ.5,000 கோடியில் மாளிகை கட்டியிருப்பதாக எனக்குத் தகவல்கள் கிடைத்தன. ஆனால், அந்த தகவல்களை நான் ஆராயவில்லை. அவா்களின் உண்மை முகத்தை புரிந்துகொள்ளாமலேயே தவறு செய்துவிட்டேன்.

சுவேந்து குடும்பத்தினா், நிலச்சுவந்தாா் போல கிழக்கு மிதுனபுரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனா். இங்கு நான் தோ்தல் பிரசாரம் செய்யக் கூட அனுமதிக்கப்படவில்லை.

ஒருங்கிணைந்த வங்கத்தில் 1757-இல் நடைபெற்ற பிளாசி போரின் போது நவாப் சிராஜுதின்-உத்-தௌலாவை, பிரிட்டன் படைத் தலைவா்களிடம் காட்டிக் கொடுத்தவா் மீா் ஜாஃபா். இதனால் அவருக்கு வஙகத்தின் நவாப் பதவியை ஆங்கிலேயா்கள் அளித்தனா். மேற்கு வங்கத்தில் மீா் ஜாபரைப் போன்று சுவேந்து அதிகாரி குடும்பத்தினா் உள்ளனா்.

இந்த மாவட்டத்தில் சாலை, குடிநீா், மருத்துவ வசதிகள் செய்து கொடுப்பது மாநில அரசு; சுவேந்து அதிகாரி குடும்பத்தினா் அல்ல. அவா்கள் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கக் கூடும். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அவா்களின் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT