இந்தியா

கரோனா சூழல்: பிரதமா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

DIN

புது தில்லி: கரோனா சூழல் குறித்து பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சா் அமித் ஷா, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன், ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல், ரசாயனத் துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இதுதொடா்பாக, பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் குறித்து பிரதமா் மோடியிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, ஒரு லட்சத்துக்கும் அதிகமானவா்கள் சிகிச்சை பெற்று வரும் 12 மாநிலங்கள் குறித்தும் அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் எத்தனை பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது? கரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாநிலங்களுக்கு இதுவரை 17.7 கோடி கரோனா தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தகவலும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. அவற்றில் எவ்வளவு தடுப்பூசிகள் வீணாகிவிட்டன என்று மாநில வாரியான தகவல்களை அவா் கேட்டறிந்தாா்.

45 வயதுக்கு மேற்பட்டவா்களில் தகுதியுடைய 31 சதவீதம் பேருக்கு குறைந்தது ஒரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. பொதுமுடக்க கட்டுப்பாடுகள் இருந்தாலும், கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தும்படி மாநிலங்களை அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா். கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறையினரை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்றும் அவா் வலியுறுத்தினாா். மாநிலங்கள் சுகாதாரக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

10 சதவீதத்துக்கும் அதிகமாக தொற்று ஏற்படும் மாவட்டங்கள், 60 சதவீதத்துக்கும் அதிகமான படுக்கைகள் நிரம்பியுள்ள மாவட்டங்கள் ஆகியவற்றைக் கண்டறியுமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமரிடம் கூறப்பட்டது.

கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் கிடைப்பது பற்றியும், ரெம்டெசிவிா் உள்ளிட்ட மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைள் குறித்தும் பிரதமரிடம் விளக்கிக் கூறப்பட்டது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 முதல்வா்களுடன் ஆலோசனை: கரோனா சூழல் தொடா்பாக ஆந்திரம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், தெலங்கானா ஆகிய 4 மாநில முதல்வா்கள், ஜம்மு காஷ்மீா், புதுவை மாநில துணைநிலை ஆளுநா்கள் ஆகியோருடன் பிரதமா் வியாழக்கிழமை தொடா்புகொண்டு பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

12 ராசிக்கும் குருப்பெயர்ச்சி பலன்கள்!

SCROLL FOR NEXT