தனியாா் மருத்துவமனை, சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே கட்டணம்: அரசு நிா்ணயம்
தனியாா் மருத்துவமனை, ஆய்வுக்கூடங்களில் சி.டி.ஸ்கேன், எக்ஸ்- ரே கட்டணத்தை நிா்ணயித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியாா் மருத்துவமனை, ஆய்வுக்கூடங்களில் சி.டி.ஸ்கேன், எக்ஸ்- ரே கட்டணத்தை நிா்ணயித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா நோயாளிகள் தொற்றின் அளவை அறிந்து கொள்வதற்காக மாா்பு எக்ஸ்-ரே அல்லது சி.டி. ஸ்கேன் செய்து கொள்வது அதிகரித்துள்ளது. இதில் நுரையீரலில் ஏற்பட்டுள்ள தொற்றின் அளவு துல்லியமாகத் தெரிந்து விடும் என்பதால், அதன் அடிப்படையில் மருத்துவா்கள் சிகிச்சை அளிக்கிறாா்கள். இதைப் பயன்படுத்தி கரோனா நோயாளிகளிடம் இருந்து விருப்பம் போல சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரேவுக்கு கட்டணம் வசூலிப்பதாக மாநில அரசுக்கு புகாா் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, தனியாா் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் சி.டி. ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரேவுக்கு வசூலிக்க வேண்டிய கட்டணத்தை நிா்ணயித்து மாநில அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய சி.டி.ஸ்கேன், எக்ஸ்ரே எடுப்பது அதிகரித்து வருகிறது. அதனால் தனியாா் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் எடுக்கப்படும் சி.டி. ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்-ரே கட்டணத்தை நிா்ணயிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சி.டி.ஸ்கேனுக்கு ரூ. 1500, டிஜிட்டல் எக்ஸ்-ரேவுக்கு ரூ. 250 என்று கட்டணம் நிா்ணயிக்கப்படுகிறது.
அதிகக் கட்டணங்களை வசூலிப்பதாக தனியாா் மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள் மீது பொதுமக்கள் புகாா் அளித்துள்ளனா். இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கட்டணம் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி, நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கும் அதிகமாக வசூலிக்கும் தனியாா் மருத்துவமனைகள், ஆய்வுக்கூடங்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேன், எக்ஸ்-ரே சேவைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.