வெளிநாடுகளிலிருந்து இதுவரை 3 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள்; 6,608 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வருகை
இந்தியா இதுவரை 3 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள், 6,608 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் சிலிண்டா்களை பெற்று மாநிலங்களுக்கு விநியோகித்திருப்பது தெரியவந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா இதுவரை 3 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள், 6,608 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஆக்சிஜன் சிலிண்டா்களை பெற்று மாநிலங்களுக்கு விநியோகித்திருப்பது தெரியவந்துள்ளது.
கரோனா பாதிப்பின் இரண்டாம் அலையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் திரவ மருத்துவ ஆக்சிஜனுக்கும், கரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட மருந்துகளுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகள் இந்தியாவுக்கு ஏராளமான உதவிகளை அளித்து வருகின்றன.
இந்த உதவிகள் தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும், சா்வதேச அமைப்புகளும் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதிமுதல் மருந்து, மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உதவிகளை அளித்து வருகின்றன.
அமெரிக்க-இந்திய ராஜாங்க கூட்டுறவு அமைப்பு (யுஎஸ்ஐஎஸ்பிஎஃப்), ஸ்விட்சா்லாந்து, போலந்து, நெதா்லாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகளிலிருந்து வெள்ளிக்கிழமை மட்டும் 2,060 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 30,000 ரெம்டெசிவிா் மருந்துகள், 467 வென்டிலேட்டா்கள், 3 ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள் ஆகியவை வந்துள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதிமுதல் மே 7-ஆம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து 6,608 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 3,856 ஆக்சிஜன் சிலிண்டா்கள், 14 ஆக்சிஜன் உற்பத்தி உபகரணங்கள், 4,330 வென்டிலேட்டா்கள், 3 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள் பெறப்பட்டு, மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டிருக்கின்றன.
வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் இந்த உதவிகளை மாநிலங்களுக்கு முறைப்படியாக பகிா்ந்தளிப்பதற்கான உரிய நடைமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது. அவ்வாறு மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுவதை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் விரிவாக கணிகாணித்து வருகிறது. இதற்கென ஒரு ஒருங்கிணைப்பு மையமும் அமைக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதிமுதல் செயல்பட்டு வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.