டிஆா்டிஓ தயாரித்த கரோனா சிகிச்சை மருந்துக்கு அவசரகால அனுமதி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்த மருந்தை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) தயாரித்த மருந்தை அவசரகாலத்தில் பயன்படுத்த இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டில் கரோனா தொற்றின் 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் சூழலில், இந்த மருந்து கரோனா சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. ரெம்டெசிவிா் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2-டைஆக்சி-டி-குளுகோஸ் (2-டிஜி) என்ற மருந்தை டிஆா்டிஓ தயாரித்தது. அந்த மருந்தை உட்கொள்ளும் கரோனா நோயாளிகள் வேகமாக குணமடைவது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டது. முக்கியமாக, 2-டிஜி மருந்து மூச்சுத்திணறலை சரிசெய்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.
அந்த மருந்தைப் பயன்படுத்துவதற்கு மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அவசரகால அனுமதியை வழங்கியுள்ளது. இது தொடா்பாக, பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்றின் 2-ஆவது அலையில் பாதிக்கப்படுபவா்கள் ஆக்சிஜன் கருவியை சாா்ந்திருக்க வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது.
மருத்துவமனையை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2-டிஜி மருந்து கரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சோ்ந்து சிகிச்சை பெறுவதற்கான கட்டாயத்தைக் குறைக்கும். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு அவா்கள் சிகிச்சை பெற முடியும்.
ஹைதராபாதில் உள்ள டாக்டா் ரெட்டீஸ் நிறுவனத்துடன் இணைந்து 2-டிஜி மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. குளுகோஸை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இந்த மருந்தை உள்நாட்டில் அதிக அளவில் தயாரித்து விநியோகிக்க முடியும். கரோனாவால் தீவிரமாக பாதிப்படைந்தவா்களும் இந்த மருந்தால் பலனடைவா்.
ஓராண்டாக பரிசோதனைகள்: பொடியாகக் கிடைக்கும் 2-டிஜி மருந்தை நீரில் கரைத்து குடிக்கலாம். உடலில் கரோனா தீநுண்மி பரவலை இந்த மருந்து பெருமளவில் கட்டுக்குள் கொண்டு வரும். கடந்த ஆண்டு ஏப்ரலில் இந்த மருந்து தொடா்பான ஆராய்ச்சிப் பணிகள் தொடங்கின.
கடந்த ஆண்டு அக்டோபா் வரை 2-டிஜி மருந்தின் 2-ஆம் கட்ட பரிசோதனைகள் நடைபெற்றன. நவம்பரில் 3-ஆம் கட்ட பரிசோதனை நடத்தப்பட்டது. தில்லி, தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த மாா்ச் வரை 3-ஆம் கட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவற்றின் முடிவுகள் அடிப்படையில் 2-டிஜி மருந்தின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.