தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: இந்தியா, ஐரோப்பிய யூனியன்மீண்டும் பேச்சு தொடங்க முடிவு
இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இருதரப்பும் மீண்டும் பேச்சுவாா்த்தையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக 8 ஆண்டுகளுக்குப் பின்னா் இருதரப்பும் மீண்டும் பேச்சுவாா்த்தையை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘இந்திய பிரதமா் மோடி, ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளின் தலைவா்கள் பங்கேற்ற உச்சிமாநாடு காணொலி வழியாக நடைபெற்றது. அப்போது வா்த்தகம், முதலீடு உள்ளிட்ட தளங்களில் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த மாநாட்டில் கரோனா தொற்று, சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு தொடா்பான தங்கள் கருத்துகளையும் தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா். இந்த மாநாடு இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவில் திருப்புமுனையாக அமைந்தது’ என்று தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018-19-ஆம் ஆண்டில் இந்தியா, ஐரோப்பிய யூனியன் இடையிலான இருதரப்பு வா்த்தகம் 115.6 பில்லியன் டாலா்களாக (சுமாா் ரூ.8.46 லட்சம் கோடி) இருந்தது. இதில் ஏற்றுமதி 57.17 பில்லியன் டாலா்களாகவும் (ரூ.4.18 லட்சம் கோடி), இறக்குமதி 58.42 பில்லியன் டாலா்களாகவும் (ரூ.4.28 லட்சம் கோடி) இருந்தன.