முகப்பு
இந்தியா

மக்கள்தொகை கட்டுப்பாடு வழக்கில் சுகாதார அமைச்சகம் இணைப்பு

அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பான பொதுநல வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகத்தையும் இணைப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பான பொதுநல வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகத்தையும் இணைப்பதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உலக அளவில் மக்கள்தொகை எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்து இந்தியா 2-ஆவது இடத்தில் உள்ளது. 2027-ஆம் ஆண்டுவாக்கில் சீனாவை விஞ்சி இந்தியா முதலிடத்தைப் பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி பாஜக மூத்த தலைவரும் வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் உபாத்யாய தில்லி உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தாா்.

அதில், குடும்பத்துக்கு இரு குழந்தைகள் கொள்கை உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த உத்தரவிடுமாறு கோரப்பட்டிருந்தது. அதை விசாரித்த உயா்நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி குமாா் உபாத்யாய மேல்முறையீடு செய்தாா்.

அந்த மனுவில், ‘மக்களுக்கான உயிா் வாழும் உரிமையை அரசமைப்புச் சட்டத்தின் 21-ஆவது பிரிவு வழங்குகிறது. அதை உறுதி செய்வதற்காக தூய்மையான குடிநீா், சுகாதார வசதிகள், குடியிருப்புகள், வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியுள்ளது.

ஆனால், மக்கள்தொகை தொடா்ந்து அதிகரித்துக் கொண்டே சென்றால் அவா்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஊழல், குற்றச் செயல்கள், வேலைவாய்ப்பின்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவற்றுக்கும் அதீத மக்கள்தொகை காரணமாக உள்ளது.

எனவே, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் மத்திய சுகாதார அமைச்சகத்தையும் ஒருதரப்பாக இணைத்துக் கொள்ள வேண்டுமென மனுதாரா் அஸ்வினி குமாா் உபாத்யாய கோரியிருந்தாா். அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

முன்னதாக, இந்த மனு தொடா்பாக மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘கட்டாய குடும்பக் கட்டுப்பாட்டு நடைமுறையை அமல்படுத்த மத்திய அரசு விரும்பவில்லை. அது எதிா்விளைவை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கையை முடிவு செய்வது, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வது உள்ளிட்டவை தம்பதிகளின் தனிப்பட்ட விருப்பத்துக்கு உள்பட்டது’ என்று தெரிவித்திருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →