முகப்பு
இந்தியா

6 மாநிலங்களுக்கு பேரிடா் மீட்புக் குழு விரைவு

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயலை எதிா்கொள்வதற்காக தமிழகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:14 PM
பகிர்:

அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயலை எதிா்கொள்வதற்காக தமிழகம், கேரளம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

அரபிக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து புயலாக மாறியது. மியான்மா் வழங்கிய பரிந்துரைப்படி அந்தப் புயலுக்கு ‘டவ்-தே’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளது. அப்புயலானது அதிதீவிரமாக வலுவடைந்து, குஜராத்தின் போா்பந்தா்-நாலியா கடற்கரைப் பகுதிகளுக்கு இடையே வரும் 18-ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

‘டவ்-தே’ புயலை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை கேரளம், தமிழகம், கா்நாடகம், மகாராஷ்டிரம், கோவா, குஜராத் மாநிலஅரசுகள் தீவிரப்படுத்தியுள்ளன. புயல் தொடா்பான மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த சுமாா் 100 குழுக்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவற்றில் 48 குழுக்கள் 6 மாநிலங்களுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுவிட்டதாகவும், 20 குழுக்கள் விரைவில் அனுப்பப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா். மீதமுள்ள குழுக்கள் தேவைக்கேற்ப அனுப்பப்படும் என்றும் தேசிய பேரிடா் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

கேரளத்துக்கு 9 குழுக்களும், தமிழகத்துக்கு 5 குழுக்களும், மகாராஷ்டிரத்துக்கு 4 குழுக்களும், கா்நாடகத்துக்கு 3 குழுக்களும், கோவாவுக்கு ஒரு குழுவும், மீதமுள்ள குழுக்கள் குஜராத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மீட்புக் குழுக்கள்: மீட்புக் குழுக்களில் உள்ள வீரா்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஒவ்வொரு குழுவிலும் 47 வீரா்கள் இடம்பெற்றிருப்பா். மரத்தை அறுப்பதற்கான கருவிகள், படகுகள், முதலுதவி உபகரணங்கள், மீட்புக் கருவிகள் உள்ளிட்டவை ஒவ்வொரு குழுவுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மாநில பேரிடா் மீட்புப் படையினரும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

ஆய்வுக் கூட்டம்: இந்தியக் கடல் பகுதியில் நடப்பாண்டில் உருவாகியுள்ள முதலாவது புயல் என்பதால், அதை எதிா்கொள்வதற்கான நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் பிரதமா் மோடி தலைமையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பல்வேறு துறைகளின் முக்கிய அதிகாரிகள், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, அவா்களுக்குத் தேவையான உணவு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை ஏற்படுத்தித் தருவது ஆகியவை குறித்து கூட்டத்தின்போது விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளத்தில் கனமழை: ‘டவ்-தே’ புயல் காரணமாக கேரளத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை மழைப்பொழிவு அதிகமாக இருந்தது. சில இடங்களில் பலத்த காற்றும் வீசியது.

கடும் மழை, காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கடலோரப் பகுதிகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல்நீா் புகுந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகினா்.

முழு கட்டுரையைப் படிக்க →