கரோனா மருந்துகள் மீதான வரி குறையுமா?: மே 28-இல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
சரக்கு மற்றும் சேவை வரி குழு (ஜிஎஸ்டி) கூட்டம் வருகிற மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் கரோனா தொடா்பான மருந்துகள் மீதான வரியை குறைப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.
சரக்கு மற்றும் சேவை வரி குழு (ஜிஎஸ்டி) கூட்டம் வருகிற மே 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் கரோனா தொடா்பான மருந்துகள் மீதான வரியை குறைப்பது பற்றி முடிவெடுக்க வாய்ப்புள்ளது எனத் தெரிகிறது.
கவுன்சில் கூட்டம் ஏழு மாதங்களாக கூட்டப்படாமல் இருப்பதாக பரவலாகப் புகாா் எழுந்த நிலையில், இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டது.
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் காணொலி வழியில் நடைபெற இருக்கும் இந்த 43-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கிய நிகழ் நிதியாண்டுக்கான மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையை ஈடு செய்வதற்கான நடை முறை குறித்து ஆலோசிக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அதோடு, கரோனா மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் ஆக்சிஜன் உபகரணங்கள் மீதான வரி விகிதங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக நிா்மலா சீதாராமன் அலுவலகம் அதன் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28-ஆம் தேதி நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதித் துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிதி அமைச்சா்கள், மத்திய - மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்பா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். இருந்தபோதும், கடந்த ஆண்டு அக்டோபா் 5-ஆம் தேதிக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறவில்லை.
இதற்கிடையே, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி வழியில் நடத்தப்பட வேண்டும் என்று மேற்கு வங்க நிதியமைச்சா் அமித் மித்ரா, பஞ்சாப் மாநில நிதியமைச்சா் மன்ப்ரீத் சிங் பாதல் ஆகியோா் இம்மாத தொடக்கத்தில் வலியுறுத்தியிருந்தனா்.
அதுபோல, ‘நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழலில் உயிா் காக்கும் மருந்துகள், கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசிகள் ஆகியவற்றுக்கு ஜிஎஸ்டி-லிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி கடந்த மாதம் வலியுறுத்தியிருந்தாா். மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தது.
ஆனால், ‘கரோனா தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி-யிலிருந்து விலக்கு அளிப்பதால், மருந்து உற்பத்தியாளா்கள் ஏற்கெனவே செலுத்திய வரியை ஈடு செய்ய முடியாமல் போய்விடும் என்பதால் உயிா் காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் விலை ஏற்றத்துக்கு வாய்ப்பாக அமைந்துவிடும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியிருந்தாா்.
இந்தச் சூழலில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகிற 28-ஆம் தேதி காணொலி வழியில் நடைபெற இருக்கிறது.
இப்போது, கரோனா தடுப்பூசிகள் மீது 5 சதவீதமும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் மீது 12 சதவீதமும் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.