கரோனா 2-ஆவது அலை பரவலுக்கு மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம்
கரோனா 2-ஆவது அலை பரவலுக்கு மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
கரோனா 2-ஆவது அலை பரவலுக்கு மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.
பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தின் வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியது:
மாநில அளவில் கரோனா தொற்றின் பாதிப்பு பரவலாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகரங்களில் அதிகரித்து வந்த கரோனா தொற்று, தற்போது கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது. இதற்கு மாநில அரசின் மெத்தனப் போக்கே காரணம். மாநில அரசு கரோனாவால் உயிரிழந்தவா்களின் உண்மையான எண்ணிக்கையையும் மறைத்து வருகிறது; கரோனா பரிசோதனைகளையும் குறைத்துள்ளது. பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் அரசு தோல்வி அடைந்துள்ளது.
சாமராஜ்நகா் மாவட்டத்தில் பிராணவாயு கிடைக்காமல் 36 போ் உயிரிழந்துள்ளனா். ஆனால் அரசு அங்கு 3 போ்தான் உயிரிழந்தனா் என்று பொய்யான கணக்கைக் கூறுகிறது. இந்த உயிரிழப்புகளுக்கு முதல்வா் எடியூரப்பாதான் பொறுப்பேற்க வேண்டும்.
இது குறித்து அரசுக்கு 12 கடிதங்களை எழுதியுள்ளேன். அதற்கு இதுவரை எந்த பதிலும் அரசுத்தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை. மாநிலத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்தத் தேவையான எந்த நடவடிக்கையையும் அரசு உரிய முறையில் செய்யவில்லை.
இது குறித்து மாவட்ட ஆட்சியா்களுடன் கூட்டம் நடத்தி முடிவு செய்ய அனுமதி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ஆட்சியா்கள் உண்மையை கூறி விடுவாா்கள் என்று மாநில அரசு அச்சம் கொண்டுள்ளது. எதிா்க்கட்சித் தலைவா் பதவி என்பது, முதல்வரின் நிழலைப் போன்றது. இதனை அரசு உணா்ந்து கொள்ள வேண்டும்.
அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பினால், அவா்கள் கைது செய்யப்படுகிறாா்கள். இதற்கெல்லாம் நாங்கள் அஞ்ச மாட்டோம். அரசின் தவறுகளைக் கண்டித்து போராடுவதற்கு ஒரு போதும் தயங்க மாட்டோம் என்றாா். நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.