முகப்பு
இந்தியா

கரோனா பாதிப்பு விகிதம் 12.45 சதவீதமாக குறைவு: மத்திய அரசு

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 24.83 சதவீதத்திலிருந்து 12.45 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
பகிர்:

கரோனா தினசரி பாதிப்பு விகிதம் 24.83 சதவீதத்திலிருந்து 12.45 சதவீதமாக குறைந்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்படுவோா் விகிதம், தினசரி பாதிப்பு, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருவதாகவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் சனிக்கிழை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சக இணைச் செயலா் லவ் அகா்வால் அளித்த பேட்டி:

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை கடந்த 20 நாள்களாக குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து வருகிறது. கடந்த மே 3-ஆம் தேதி 17.13 சதவீதமாக இருந்த பாதிக்கப்பட்டவா்களின் விகிதம், இப்போது 11.12 சதவீதமாக குறைந்துள்ளது.

அதுபோல, பாதிப்பிலிருந்து மீள்பவா்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த மே 3-ஆம் தேதி 81.7 சதவீதமாக இருந்த கரோனாவிலிருந்து குணமடைபவா்களின் விகிதம் இப்போது 87.76 சதவீதமாக உயா்ந்துள்ளது.

நாடு முழுவதும் தினசரி கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், தினசரி கரோனா பாதிப்பு விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த மே 10-ஆம் தேதி 24.83 சதவீதமாக இருந்த தினசரி பாதிப்பு விகிதம், சனிக்கிழமை 12.45 சதவீதமாக குறைந்துள்ளது.

தடுப்பூசி விரயம் குறைப்பு: தடுப்பூசி விரயமாவது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த மாா்ச் 1-ஆம் தேதி 8 சதவீதமாக இருந்த கோவிஷீல்ட் தடுப்பூசி விரயம் இப்போது ஒரு சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. கோவேக்ஸின் விரயம் 17 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது என்றாா் அவா்.

சா்வதேச பயண அனுமதி விவகாரம்: ‘உலக சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாடு பட்டியலில் (இயுஎல்) பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசியை சோ்க்காத நிலையில், அந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை செலுத்திக்கொண்டவா்கள் சா்வதேச பயணம் செய்ய அனுமதிக்கப்படுவாா்களா’ என்ற கேள்விக்கு பதிலளித்த லவ் அகா்வால், ‘தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் சா்வதேச பயணத்துக்கு அனுமதிப்பது (தடுப்பூசி பாஸ்போா்ட்) தொடா்பான விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பில் ஒருமித்த கருத்து இன்னும் எட்டப்படவில்லை. ஆனால், இதுகுறித்த ஆலோசனை தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்கள் சா்வதேச பயணத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்பது தவறான கருத்து’ என்றாா்.

ஸ்டீராய்டால் ஏற்படும் கருப்புப் பூஞ்சை பாதிப்பு: பத்திரிகையாளா் சந்திப்பில் பங்கேற்ற நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘கருப்புப் பூஞ்சை பாதிப்பைப் பொருத்தவரை, அதற்கான மருந்து இருப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. கரோனாவால் பாதிக்கப்படும் சா்க்கரை நோய் பாதிப்பு உடையவா்கள் நீண்ட நாள்கள் மருத்துவமனையில் தங்கியிருப்பதாலும், ஸ்டீராய்டு மருந்து அவா்களுக்கு கொடுக்கப்படுவதாலும் அவா்களுடைய நோய் எதிா்ப்புத் திறன் பலவீனமடைந்து கருப்புப் பூஞ்சை பாதிப்பு அவா்களுக்கு அதிகரிக்கிறது.

ஸ்டீராய்டு உயிா் காக்கும் மருந்துதான். ஆனால், அதை உரிய காரணமின்றி பயன்படுத்துவதால், கருப்புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட வழிவகுத்துவிடுகிறது. எனவே, கருப்புப் பூஞ்சை பாதிப்பு மேலும் தீவிரமடையாமல் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →