மலப்புரத்தில் மும்மடங்கு பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும்: முதல்வர் பினராயி விஜயன்
மலப்புரத்தில் மும்மடங்கு பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மலப்புரத்தில் மும்மடங்கு பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், மலப்புரம் மாவட்டத்தில் மும்மடங்கு பொதுமுடக்கம் தொடர்ந்து அமலில் இருக்கும். தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்திருப்பதால் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். பாதுகாப்பு பணியில் அதிக எண்ணக்கையில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதோடு கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் 75,000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றார். கேரளத்தில் இன்று ஒரேநாளில் 28,514 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 176 பேர் பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 7170ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2,89,283 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, கடந்த 8-ஆம் தேதி அந்த மாநிலத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.
பின்னர் அந்த பொதுமுடக்கம் மே 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனிடையே கரோனா பரவல் காரணமாக விதிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் மே 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அதேசமயம் கரோனா பாதிப்பு குறைந்துள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் ஆகிய இடங்களில் விதிக்கப்பட்டிருந்த மூன்று மடங்கு பொதுமுடக்கமும் இன்று முதல் திரும்பப் பெறப்பட்டது.