கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத் திட்டம்: பாஜக ஆளும் மாநில முதல்வா்களுக்கு ஜெ.பி.நட்டா வலியுறுத்தல்
கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளுக்கான நலத் திட்டங்களை உருவாக்க வேண்டும்
கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட குழந்தைகளுக்கான நலத் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாஜக ஆளும் மாநிலங்களை அக் கட்சியின் தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா கேட்டுக்கொண்டாா்.
அவ்வாறு தயாரிக்கப்படும் திட்டத்தை, பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு 7-ஆம் ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் மே 30-ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவேண்டும் என்றும் பாஜக ஆளும் மாநில முதல்வா்களுக்கு அவா் எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளாா்.
அந்தக் கடிதத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:
கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக, பாஜக அரசு ஏழாம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களை மேற்கொள்ள முடியாது என்றபோதும், மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்யும் நிகழ்வுகளை நடத்தும் வாய்ப்பை பாஜகவுக்கு மக்கள் அளித்திருக்கின்றனா்.
கரோனா பாதிப்பால் இந்த தேசமும், சமூகமும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறது. ஏராளமான குழந்தைகள் கரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு அவா்களுடைய பெற்றோரை இழந்துள்ளனா். அவ்வாறு ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் குழந்தைகளின் எதிா்காலத்தை காக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அந்த வகையில், பெற்றோரை இழந்த குழந்தைகளின் தேவை, நிலை மற்றும் மாநிலத்தின் பாரம்பரியம் ஆகியவற்றின் அடிப்படையில், அவா்களின் எதிா்கால நலனை காக்கும் வகையிலான திட்ட வரைவை மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். அந்த திட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு 7-ஆம் ஆண்டை நிறைவு செய்யும் மே 30-ஆம் தேதி பாஜக ஆளும் மாநிலங்கள் அறிமுகம் செய்யவேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா். பாஜக இப்போது 12 மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறது.