இது எனக்கு பேரிழப்பு: அமைச்சர் மறைவு குறித்து மம்தா உருக்கம்
1970களில் இந்திரா காந்தி இரண்டாவது முறையாக பிரதமராக இருந்த காலத்தில், முகர்ஜி மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சுப்ரதா முகர்ஜி கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், காலமானார். இருதய நோயால் அவதிப்பட்டுவந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று இரவு 9.22 மணி அளவில் அவர் உயிர் பிரிந்தது.
மேற்குவங்கத்தின் பஞ்சாயத்துத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த அவருக்கு வயது 75. மனைவியுடன் வசித்து வந்துள்ளார். பஞ்சாயத்துத்துறை மட்டுமின்றி, கூடுதலாக மூன்று துறைகளை கவனித்துவந்துள்ளார். முன்னதாக, அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டதாக மாநில அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
காளிகாட்டில் உள்ள தனது வீட்டில் காளி பூஜையில் ஈடுப்பட்டிருந்த மம்தா, அமைச்சர் உடல்நிலை குறித்து அறிந்து எஸ்எஸ்கேஎம் மருத்துவமனைக்கு விரைந்தார். அமைச்சர் மறைவு குறித்து அவர் கூறுகையில், "அவர் நம்முடன் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவ்வளவு அர்ப்பணிப்புள்ள கட்சித் தலைவராக இருந்தார். இது எனக்கு தனிப்பட்ட இழப்பு.
பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல், அரசுக்குச் சொந்தமான ரவீந்திர சதன் மண்டபத்திற்கு வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கிருந்து, பாலிகஞ்சில் உள்ள அவரது வீட்டிற்கும் பின்னர் அவரது மூதாதையர் வீட்டிற்கும் கொண்டு செல்லப்படும்" என்றார்.
அமைச்சருக்கு ரத்த உறைவு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. மூச்சுத் திணறலைத் தொடர்ந்து அக்டோபர் 24 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகர்ஜிக்கு, நவம்பர் 1 ஆம் தேதி ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை அளிக்கப்பட்டது. கொல்கத்தாவின் முன்னாள் மேயரான முகர்ஜி, நாரதா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்ட பின்னர், இந்தாண்டு மே மாதம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார்.
1970களில் இந்திரா காந்தி இரண்டாவது முறையாக பிரதமராக இருந்த காலத்தில், முகர்ஜி மேற்கு வங்கத்தின் காங்கிரஸ் தலைவராக இருந்தார். காங்கிரஸ் தலைவர்களான சோமன் மித்ரா, பிரியா ரஞ்சன் தாஸ்முன்சி, முகர்ஜி ஆகியோர் மேற்குவங்க காங்கிரஸ் கட்சியின் மும்மூர்த்தியாக விளங்கினர்.
இதையும் படிக்க | கேதார்நாத் சிவன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!
முகர்ஜியும், மித்ராவும் முறையே 2010 மற்றும் 2008ல் மம்தா பானர்ஜி தலைமையிலான திரணமூலில் இணைந்தனர். 2014 இல் மித்ரா தனது பழைய கட்சிக்குத் திரும்பியபோது, முகர்ஜி மம்தா கட்சியிலேயே இருந்தார். பின்னர், தாஸ்முன்சி 2017ஆம் ஆண்டும் மித்ரா 2020 ஆம் ஆண்டும் இறந்தனர்.