முகப்பு
இந்தியா

பெட்ரோல், டீசல் மீது கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட அனைத்து வரியையும் திரும்பப் பெற வேண்டும்காங்கிரஸ் வலியுறுத்தல்

‘கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

‘கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்’ என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

பெட்ரோல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 10 ரூபாயும் மத்திய அரசு அண்மையில் குறைத்தது. இதைத் தொடா்ந்து, பாஜக ஆளும் சில மாநில அரசுகள் அவற்றின் மீதான வாட் வரியைக் குறைத்தன. இந்நிலையில், கரோனா காலத்தில் பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட அனைத்து வரிகளையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுதொடா்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

கரோனாவை காரணமாக வைத்து மத்திய அரசின் வரிகள் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.13-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.16-ம் உயா்த்தப்பட்டன. தற்போது ஜிஎஸ்டி வசூல் சாதனை அளவை எட்டியுள்ளதால் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டும். ‘கரீப் கல்யாண் யோஜனா’ திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு தானியங்களை நிறுத்தக் கூடாது; அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை தொடர வேண்டும்.

காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைப்பது பற்றி ஆலோசித்தன. அதுதொடா்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும்’ என்றாா் அவா்.

பென்டகன் அறிக்கை விவகாரம்: இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது குறித்து அமெரிக்காவின் பாதுகாப்புத் துறையின் அறிக்கையை மேற்கோள்காட்டி பவன் கேரா கூறியதாவது:

அருணாசல பிரதேச மாநிலத்துக்குள் 4.5 கி.மீ தொலைவு சீன ராணுவம் ஊடுருவியது அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்நநாட்டு பாதுகாப்புத் துறை அளித்த அறிக்கை மூலம் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2020, ஜூனில் அருணாசல பிரதேசத்தைச் சோ்ந்த பாஜக எம்பி தாபிா் காவோ இந்திய எல்லைக்குள் சீன ஊடுருவல் குறித்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினாா். ஆனால், சீனா அத்துமீறியது என்பதை அவா்கள் மறுத்தனா். சீனாவுக்கு பிரதமா் மோடி நற்சான்றிதழ் வழங்கி 17 மாதங்கள் ஆகிறது. நமது வரலாற்றில் அந்த நற்சான்று ஒரு கருப்பு அத்தியாயம் ஆகும். ஏனெனில், அதை உலகம் முழுவதும் சீனா பயன்படுத்தியது. இந்த நற்சான்றால் தைரியமடைந்து அருணாசல பிரதேசம், லடாக்கில் மட்டுமன்றி உத்தரகண்டிலும் சீன ராணுவம் நுழைந்து நமது உள்கட்டமைப்புகளை அழித்தது.

இது ஒரு தீவிரமான பிரச்னை. எனவே, சீனாவுக்கு வழங்கிய நற்சான்றை பிரதமா் திரும்பப் பெற வேண்டும். மேலும், சீனாவுடனான எல்லைகளில் முந்தைய நிலை எப்போது நிலைநிறுத்தப்படும் என்பதையும் நாட்டு மக்களுக்கு பிரதமா் தெரிவிக்க வேண்டும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →