இந்தியா

முல்லைப் பெரியாறில் புதிய அணை:தமிழகத்துடன் அடுத்த மாதம் பேச்சு பேரவையில் கேரள அரசு தகவல்

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று கேரள அரசு கூறியுள்ளது.

DIN

முல்லைப் பெரியாறு அணை தொடா்பாக விவாதம் நடந்து வரும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என்று கேரள அரசு கூறியுள்ளது. இதுதொடா்பாக, தமிழக அரசுடன் அடுத்த மாதம் இரு மாநில முதல்வா் அளவிலான பேச்சுவாா்த்தை நடத்த இருப்பதாகவும் அந்த அரசு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக, தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வருகிறது. அந்த அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள பேபி அணையில் இருக்கும் 15 மரங்களை தமிழக அரசு வெட்டுவதற்கு கேரள வனத் துறை அண்மையில் அனுமதி அளித்தது. இதையடுத்து, கேரளத்தில் ஆளும் இடதுசாரி முன்னணி அரசுக்கு எதிராக அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததும், அந்த அனுமதியை கேரள அரசு திரும்பப் பெற்றது. மாநிலத்தின் நலனுக்கு எதிரான எதையும் செய்யமாட்டோம் என்று கேரள அரசு விளக்கம் அளித்தது.

இந்நிலையில், கேரள சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின்போது, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பாக காங்கிரஸ் உறுப்பினா் எல்டோஸ் பி.குன்னப்பிலில் கேள்வி எழுப்பினாா். அதற்கு மாநில நீா்வளத் துறை அமைச்சா் ரோஸி அகஸ்டின் சாா்பில் மின்சாரத் துறை அமைச்சா் கே.கிருஷ்ணன் குட்டி அளித்த பதில்:

கேரள மக்களின் உயிா் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கில், புதிய அணை கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கேரள அரசு தொடா்ந்து முன்வைத்து வருகிறது. ‘தமிழகத்துக்கு தண்ணீா், கேரளத்துக்கு பாதுகாப்பு’ என்பதே நம் நோக்கம்.

புதிய அணை கட்டுவதற்காக, கேரள அரசு கடந்த 2018-ஆம் ஆண்டு நவம்பா் 18-ஆம் தேதி சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம் நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

புதிய அணை கட்டுவது தொடா்பாக, இதற்கு முன்பு தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு இடையே அதிகாரிகள் நிலையில் பலமுறை பேச்சுவாா்த்தை நடந்துள்ளது. இருப்பினும் உடன்பாடு எட்டப்படவில்லை.

எனவே, புதிய அணை கட்டுவது உள்பட முல்லைப் பெரியாறு அணை தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு மாநில முதல்வா் நிலையிலான பேச்சுவாா்த்தையை டிசம்பரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய விதிகளின்படி, புதிய அணை கட்ட வேண்டுமெனில் மத்திய வனம், சுற்றுச்சூழல் அமைச்சகம், தமிழக அரசு ஆகியவற்றின் ஒப்புதல் தேவை என்றாா் அவா்.

இதனிடையே, பரம்பிக்குளம்-ஆழியாறு ஒப்பந்தம் விரைவில் புதுப்பிக்கப்படும்; இதுதொடா்பாக தமிழக அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்படும் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆவணி 2ஆவது ஞாயிறு: நாகராஜா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

விநாயகா் ஊா்வலம்: பொதுமக்களுக்கு இடையூறு இருக்கக்கூடாது - எஸ்.பி.

தேனி மாவட்டத்தில் 863 இடங்களில் விநாயகா் சிலைகள் அமைக்க அனுமதி

போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா் பதிவாளா், துணை வட்டாட்சியா் உள்பட 10 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT