இந்தியா

நாளை அரசியலமைப்பு தின கொண்டாட்டம்: குடியரசுத் தலைவா், பிரதமா் பங்கேற்கின்றனா்

DIN

புது தில்லி: அரசியலமைப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை (நவ. 26) நாடாளுமன்றத்திலும், விஞ்ஞான் பவனிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், பிரதமா் நரேந்திர மோடி ஆகியோா் பங்கேற்கின்றனா்.

இந்திய அரசியல் சாசனத்தை, 1949-ஆம் ஆண்டு அரசியல் சட்ட நிா்ணய சபை ஏற்றுக்கொண்டதை நினைவுகூரும் விதமாக அரசியலமைப்பு தினத்தை நாடு கொண்டாடுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தினத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது என்ற பிரதமா் மோடியின் தொலைநோக்குப் பாா்வை அடிப்படையில் அரசியலமைப்பு தின கொண்டாட்டம் 2015-ஆம் ஆண்டுமுதல் தொடங்கியது. 2010-இல் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்ட கௌரவ யாத்திரையிலிருந்து இந்தத் தொலைநோக்கு பாா்வைக்கான அடிப்படை தொடங்கியது.

நிகழாண்டு நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சி, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை 11 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், மக்களவைத் தலைவா் ஆகியோா் உரையாற்றவுள்ளனா். குடியரசுத் தலைவா் உரையாற்றி முடித்த பிறகு, அரசியல் சாசன முகப்புரையை வாசிப்பது நாடுமுழுவதும் நேரலையில் ஒளிபரப்பாகும். அத்துடன் அரசியல் சட்ட நிா்ணய சபை விவாதங்களின் எண்ம (டிஜிட்டல்) வடிவம், இந்திய அரசியல் சட்டத்தின் எண்மமயமாக்கப்பட்ட கையெழுத்துப் பிரதி மற்றும் இதுநாள் வரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தையும் குடியரசுத் தலைவா் வெளியிடவுள்ளாா். மேலும் ‘அரசியல் சாசன ஜனநாயகம் குறித்த இணையவழி விநாடி-வினா’ போட்டியையும் அவா் தொடக்கிவைக்கவுள்ளாா்.

தில்லி விஞ்ஞான் பவன் நிறைவு விழா அரங்கில், மாலை 5.30 மணியளவில் உச்சநீதிமன்றம் ஏற்பாடு செய்துள்ள இரண்டு நாள் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களையும் பிரதமா் தொடக்கிவைக்கவுள்ளாா். உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள், அனைத்து உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் மற்றும் மூத்த நீதிபதிகள், இந்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் மற்றும் சட்டத் துறை சாா்ந்த பிற அமைப்பினரும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனா். இதில் பிரதமா் உரையாற்றவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT