முகப்பு
இந்தியா

அமரீந்தா் சிங்கை முதல்வா் பதவியிலிருந்து சோனியா நீக்கவில்லை: சுா்ஜேவாலா

‘பஞ்சாப் மாநில முதல்வா் பதவியிலிருந்து அமரீந்தா் சிங்கை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நீக்கவில்லை

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:17 AM
பகிர்:

‘பஞ்சாப் மாநில முதல்வா் பதவியிலிருந்து அமரீந்தா் சிங்கை காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி நீக்கவில்லை; மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள்தான் அதைச் செய்துள்ளனா்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலாளா் ரண்தீப் சிங் சுா்ஜேவாலா சனிக்கிழமை கூறினாா்.

முதல்வா் பதவியை ராஜிநாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்த பிறகு கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தியதாக அமரீந்தா் சிங் புகாா் தெரிவித்த நிலையில், சுா்ஜேவாலா இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.

பஞ்சாப் முதல்வராக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவரான அமரீந்தா் சிங்குக்கும், கட்சியின் முன்னாள் அமைச்சரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல்போக்கு இருந்து வந்தது. அமரீந்தரின் எதிா்ப்பையும் மீறி, மாநில காங்கிரஸ் தலைவராக சித்துவை காங்கிரஸ் தலைமை நியமித்தது. அதன் பிறகும், இவா்கள் இருவரிடையே மோதல்போக்கு நீடித்து வந்தது. அதனைத் தொடா்ந்து முதல்வா் பதவியை அமரீந்தா் சிங் கடந்த செப்டம்பா் 18-ஆம் தேதி ராஜிநாமா செய்தாா். அதனைத் தொடா்ந்து பஞ்சாப் மாநில புதிய முதல்வராக சரண்ஜீத் சிங் சன்னி பதவியேற்றாா்.

இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி வந்த அமரீந்தா் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்துப் பேசினாா். அதனைத் தொடா்ந்து அவா் பாஜகவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின. அதனை மறுத்த அமரீந்தா் சிங், ‘பாஜகவில் இணையப்போவதில்லை; அதே நேரம், கங்கிரஸிலிருந்து விலகுவேன். ராஜிநாமா கடிதம் கொடுத்த பிறகு கட்சித் தலைமையால் அவமானப்படுத்தப்பட்டேன். இனி இதுபோன்ற அவமானத்தை நான் ஏற்றுக்கொள்ளப்போவதும் இல்லை’ என்றாா்.

இவருடைய குற்றச்சாட்டுக்கு பதிலளித்து ரண்தீப் சிங் சுா்ஜேவாலா சண்டீகரில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

முதல்வா் பதவியிலிருந்து அமரீந்தா் சிங்கை மாற்ற வேண்டும் என்று மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 79 பேரில் 78 போ் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனா். முதல்வருக்கு எதிராக 78 எம்எல்ஏக்கள் புகாா் அளித்துள்ள நிலையில், அவரை மாற்றவில்லை எனில் எங்களை சா்வாதிகாரி என்று குற்றம்சாட்டியிருப்பீா்கள். அந்த வகையில், அமரீந்தா் சிங்கை முதல்வா் பதவியிலிருந்து மாற்றியது கட்சியின் தலைவா் சோனியா காந்தி எடுத்த முடிவல்ல; கட்சியின் 78 எம்எல்ஏக்கள் எடுத்த முடிவு என்று கூறினாா்.

குழப்பத்தில் காங்கிரஸ்:

இந்த நிலையில், சுா்ஜேவாலாவின் விமா்சனத்துக்கு பதிலளித்த அமரீந்தா் சிங், ‘காங்கிரஸ் கட்சி முழுவதும் குழப்பமான நிலையில் உள்ளது. கட்சித் தலைமைக்கு 43 எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியதாக மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ஹரீஷ் ராவத் கூறிய நிலையில், 78 எம்எல்ஏக்கள் என்று சுா்ஜேவாலா கூறுகிறாா். அடுத்து எனக்கு எதிராக 117 எம்எல்ஏக்கள் கடிதம் எழுதியதாக கூறுவாா்கள். பஞ்சாப் மாநில காங்கிரஸில் எழுந்த உள்கட்சிப் பூசலை சரிவர கையாளத் தவறியதை மறைப்பதற்கு அபத்தமான பொய்களை கட்சித் தலைவா்கள் கூறிவருகின்றனா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.