இந்தியா

லக்கிம்பூர் சம்பவம்: பாஜகவுக்கு சரத் பவார், லாலு கடும் கண்டனம்

DIN

உத்தரபிரதேச மாநிலம், லக்கீம்பூர் கெரி மாவட்டத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவத்தை அடுத்து மத்திய, மாநில பாஜக அரசுககளுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், சிவசேனை தலைவர் சஞ்சய் ரெளத் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 இதுதொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய வேளாண்மை அமைச்சருமான சரத் பவார் தில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 லக்கீம்பூர் கெரியில் நிகழ்ந்த வன்முறைக்கு மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி பொறுப்பு வகிக்கும் பாஜக அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். இந்த வன்முறைக்குப் பதிலடியாக உள்ளூர் மக்கள் தங்கள் தொகுதியில் தாங்கள் யார் என்பதை விரைவில் நிரூபிப்பார்கள்.
 இன்றோ அல்லது நாளையோ அவர்கள் கட்டாயம் இவ்வன்முறைக்கு அதிக விலை கொடுத்தாக வேண்டும். இச்சம்பவத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என்பதை எதிர்க்கட்சிகள் உறுதிப்படத் தெரிவிக்கிறோம். இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் கூடி விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். இந்த வன்முறை நிகழ்வுக்கு விசாரணை நடத்த உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதியைக்கொண்டு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் குரலை நசுக்கிவிட முடியாது என்பதை பாஜகவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அரசைத் தவறாகப் பயன்படுத்தும் இந்த ஆட்சிக்கு எதிராக நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளும் இணைந்து போராடுவார்கள் என்றார்.
 சிவசேனை கண்டனம்: லக்கீம்பூர் கெரி வன்முறை சம்பவம் இந்த தேசத்தையே உலுக்கியுள்ளது. உத்த ரபிரதேசத்தில் காங்கிரல் தலைவர் பிரியங்கா கைது செய்யப்பட்டுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்கள் விவசாயிகளைச் சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது அவசியம் என்று சிவசேனை எம்.பி. சஞ்சய் ரௌத் கூறினார்.
 லாலு பிரசாத் யாதவ்: பாட்னாவில் செய்தியாளர்களிடம் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் இதுதொடர்பாக கூறியதாவது: பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நின்றால் பாஜகவை வீழ்த்த முடியும். நமது நாடு தற்போது வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வால் அவதிப்பட்டு வருகிறது. ஆனால் பாஜக அரசோ இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதில் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. அவர்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறார்கள். விரைவில் நான் பிகாருக்கு வருவேன். தற்போது எனது உடல்நலம் குணமாகி வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT