'தேர்தல் ஆலோசகர்' போட்ட ஒற்றை ட்வீட்; காங்கிரஸ் கட்சியுடன் மாற்று கருத்து கொண்டிருக்கிறாரா பிரசாந்த் கிஷோர்?
காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமரிசிக்கும் வகையில் 'தேர்தல் ஆலோசகர்' பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு பேசுபொருளாக மாறியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, 'தேர்தல் ஆலோசகர்' பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியுடன் இணக்கமாக செயல்பட்டுவந்தார். குறிப்பாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை நேரில் சந்தித்து அவர் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர், அவருக்கு காங்கிரஸ் கட்சியில் பெரிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக செய்தி வெளியானது.
ஆனால், அதற்கு பிறகு, இதுகுறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. பஞ்சாப், சத்தீஸ்கர், கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியில் நிலவிய உள்கட்சி பூசல் வெடித்து சிதறியது. மூத்த தலைவர்கள் கட்சியிலிருந்து வெளியேறினர். குறிப்பாக, கோவா முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ கட்சியிலிருந்து விலகியது குறித்து தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறின.
அதாவது, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேரும்படி, பிரசாந்த் கிஷோர் அழைப்பு விடுத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது, அரசியல் வட்டாரங்களில் பெரும் குழப்பத்தை விளைவித்தது. காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக உள்ள ஒருவர், எதற்காக அக்கட்சியின் மூத்த தலைவரை வேறு கட்சியில் சேர அழைப்பு விடுக்க வேண்டும் என பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட ட்விட்டர் பதிவு காங்கிரஸ் கட்சியுடன் அவர் மாற்று கருத்து கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது. கட்சியின் பெயரை குறிப்பிடாமல் அவர் வெளியிட்ட பதிவில், "லக்கிம்பூர் சம்பவத்தை முன்வைத்து பழம் பெரும் கட்சி தலைமையில் எதிர்கட்சிகள் தானாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் மீண்டெழ வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அவர்களுக்கு பெரிய ஏமாற்றமே கிடைக்கவுள்ளது.
பழம் பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமடைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இப்பிரச்னைகளை சரி செய்ய தீர்வு எதுவும் கிடைக்கவில்லை" என பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் பகுதியில் கடந்த அக். 3 ஆம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனுடைய கார் விவசாயிகளின் மீது மோதியதால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும், அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இன்று ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வரை அவர் ஆஜராகவில்லை.
உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். இறுதியாக, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தாரை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான சச்சின் பைலட், நவ்ஜோத் சிங் சித்து ஆகியோர் லக்கிம்பூருக்கு செல்லும்போது தடுத்து நிறுத்தப்பட்டனர்.