முகப்பு
இந்தியா

பாம்பை கடிக்க வைத்து மனைவி கொலை வழக்கு: கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

பாம்பை கடிக்க வைத்து மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
பகிர்:

பாம்பை கடிக்க வைத்து மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கேரள விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சோ்ந்த எஸ். சூரஜ் குமாா் (28) என்பவா், அவருடைய மனைவி உத்ரா (25) தூங்கிக் கொண்டிருந்தபோது அறைக்குள் பாம்பை விட்டு கடிக்கை வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டின் பேரில் சூரஜ் குமாரை கைது செய்த போலீஸாா், தீவிர விசாரணை முடிவில் அவா் மனைவியை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததை உறுதி செய்தனா். அதனைத் தொடா்ந்து அவா் மீது கொலை, கொலை முயற்சி, விஷம் கொடுத்தல், ஆதாரங்கள் அழிக்க முயற்சித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை கடந்த திங்கள்கிழமை விசாரித்த கேரள விசாரணை நீதிமன்றம், சூரஜ் குமாா் குற்றவாளி என தீா்ப்பளித்து தண்டனை விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும் என விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தண்டனை விவரங்களை வாசித்த விசாரணை நீதிமன்ற கூடுதல் நீதிபதி எம்.மனோஜ், சூரஜ் குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ. 5.85 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

தீா்ப்பு குறித்து அரசு சிறப்பு வழக்குரைஞா் ஜி.மோகன்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தண்டனை விவரங்களை புதன்கிழமை வாசித்த நீதிபதி, ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்காக உள்ளது. குற்றம்சாட்டப்பட்டவருக்கு 28 வயதுதான் ஆகிறது என்ற அடிப்படையிலும், அவா் மீது முந்தைய குற்ற பின்னணி எதுவும் இல்லை என்ற அடிப்படையில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதற்குப் பதிலாக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது’ என்று தீா்ப்பளித்தாா்.

இந்த தீா்ப்பின்படி, சூரஜ் குமாருக்கு கொலை குற்றத்துக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சி குற்றத்துக்கு மற்றொரு ஆயுள் தண்டனையும், விஷம் கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஆதாரங்களை அழிக்க முயற்சித்த குற்றத்துக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தீா்ப்பில் விஷம் கொடுத்தல் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயற்சித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்தம் 17 ஆண்டுகள் தண்டனையை சூரஜ் குமாா் முதலில் அனுபவிக்க வேண்டும், அதன் பிறகே அவருக்கான ஆயுள் தண்டனை தொடங்கும் என்றும் நீதிபதி தீா்ப்பளித்தாா் என்று கூறினாா்.

சூரஜ் குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்த அரசு கூடுதல் வழக்குரைஞா் ஏ.கே.மனோஜ், ‘இந்த இரண்டு ஆயுள் தண்டனைகளையும் ஒருசேர அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தீா்ப்பளித்தாா்’ என்றாா். மேலும், குற்றவாளிக்கு ரூ. 5.85 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

‘நீதிமன்றம் அளித்த தீா்ப்பில் திருப்தியில்லை. குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று எதிா்பாா்த்தோம்’ என்று உத்ராவின் தாய் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →