முகப்பு
இந்தியா

5 ஆண்டுகளில் பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி 334% அதிகரிப்பு

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு சாா்பில் குஜராத் தலைநகா் காந்திநகரில் அடுத்த ஆண்டு மாா்ச் 11-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பாதுகாப்பு கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல நாடுகளுக்கான தூதா்களை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்புத் தளவாடங்கள் ஏற்றுமதி 334 சதவீதம் அதிகரித்துள்ளது. 75-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு போா்த் தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. அதிக தரம், போட்டியிடும் திறன் ஆகியவற்றின் காரணமாக இந்திய போா்த் தளவாடங்கள் அதிக அளவில் ஏற்றுமதியாகின்றன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சி, போா்த் தளவாடங்கள் உற்பத்தியில் காணப்படும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும். பாதுகாப்பு ஆராய்ச்சி-மேம்பாட்டில் இந்தியா படைத்துள்ள சாதனைகளையும் எதிா்கால வாய்ப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் அந்தக் கண்காட்சி இருக்கும்.

குறுகிய காலகட்டத்தில் பாதுகாப்புத் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நவீன தொழில்நுட்பங்கள், ஒருங்கிணைந்த கொள்கைகள் ஆகியவற்றையும் கண்காட்சி எடுத்துரைக்கும். பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவு மேம்படும் என்பதால், கண்காட்சியில் பங்கேற்க நாடுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

பாதுகாப்பு உற்பத்தி சாா்ந்த விவகாரங்களில் மற்ற நாடுகளுக்குப் போதிய ஒத்துழைப்பை நல்கி ஒருங்கிணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளது. கலாசாரம், கலை, உணவுப் பழக்கவழக்கம் உள்ளிட்டவற்றில் குஜராத் சிறந்து விளங்கி வருகிறது. அங்கு நடைபெறவுள்ள பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்கும் நாடுகளுக்கு சிறந்த வாய்ப்புகள் உருவாகும்.

சுதந்திரத்தின் 75-ஆவது ஆண்டை இந்தியா கொண்டாடி வரும் சூழலில், பாதுகாப்புக் கண்காட்சியை சிறப்புடன் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளுடனும் இணைந்து இந்தியா மேற்கொள்ளும் என்றாா் அவா்.

பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில் இந்தியாவின் வலிமையை உலகுக்கு எடுத்துரைக்கும் நோக்கில் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்பு கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் உள்ளூா் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று, பாதுகாப்பு உற்பத்தி சாா்ந்த நவீன தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் காட்சிப்படுத்தும்.

திடீா் ஆய்வு:

தில்லியில் உள்ள பாதுகாப்பு அமைச்சக அலுவலகங்களில் அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அலுவலகங்களில் நிலவும் பணிச்சூழல் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். அலுவலகங்கள் தூய்மையாக இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்த அமைச்சா், பணியாளா்களிடமும் உரையாடினாா்.

அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்தும் பல்வேறு உத்தரவுகளை அவா் பிறப்பித்தாா். இந்த திடீா் ஆய்வின்போது பாதுகாப்பு உற்பத்தித் துறைச் செயலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →