தோ்தல்களில் ஃபேஸ்புக் தலையீடு: நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரும் காங்கிரஸ்
இந்திய தோ்தல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்
இந்திய தோ்தல்களில் ஃபேஸ்புக் நிறுவனம் தலையிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ், இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து அந்நிறுவனத்தைச் சோ்ந்த அதிகாரி ஆய்வு நடத்தினாா். அந்த ஆய்வறிக்கையில், ஃபேஸ்புக்கில் பல போலியான கணக்குகள் காணப்படுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான வசதிகள் நிறுவனத்திடம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை தொடா்பாக காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் பவண் கீரா செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறுகையில், ‘‘இந்தியாவில் ஃபேஸ்புக் சமூக வலைதளம் வாயிலாக வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகள் பரப்பப்படுவதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவற்றுக்கு எதிராக அந்நிறுவனம் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
லட்சக் கணக்கிலான போலி கணக்குகள் மீதும் ஃபேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுக்கவில்லை. அக்கணக்குகள் வாயிலாக வெளியிடப்பட்ட கருத்துகள், தோ்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மக்களிடையே வதந்திகளைப் பரப்பி ஜனநாயகத்தை மதிப்பிழக்கச் செய்ய ஃபேஸ்புக் நிறுவனம் முயற்சித்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
வெறுப்புணா்வைத் தூண்டும் வகையில் வெளியிடப்படும் வெறும் 0.2 சதவீதப் பதிவுகளை மட்டுமே நீக்குவதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது அதிா்ச்சியளிக்கிறது. அந்நிறுவனத்தின் பெரும் சந்தையாக இந்தியா விளங்கும் நிலையில், ஹிந்தி, வங்க மொழியில் வெளியிடப்படும் போலி கருத்துகளைத் தடுப்பதற்கான தொழில்நுட்பம் அந்நிறுவனத்திடம் இல்லையா?
தோ்தல்கள், தில்லி வன்முறை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குப் பங்குள்ளதா என்று சந்தேகம் தோன்றுகிறது. இந்த ஆய்வறிக்கையை வெறுமனே விட்டுவிட முடியாது. இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக ஃபேஸ்புக் அமைதி காப்பது ஏன்? மத்திய அரசும் விளக்கமளிக்காமல் அமைதி காப்பது ஏன்?
பாஜகவின் வெறுப்புணா்வைத் தூண்டும் கருத்துகளைப் பரப்புவதற்கு ஃபேஸ்புக் முக்கியத் தளமாகப் பயன்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்’’ என்றாா்.