முகப்பு
இந்தியா

இடஒதுக்கீட்டில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை முதுநிலை நீட் கலந்தாய்வு நடத்தப்படாது

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்தப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினா் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடா்பாக உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்தப்படாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு கடந்த ஜூலை 29-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.

அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் மனுதாரா்கள் சிலா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அா்விந்த் தத்தாா் சில கோரிக்கைகளை வைத்தாா்.

அப்போது அவா் கூறுகையில், ‘‘முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கப்படும் என்று சுகாதார சேவைகள் இயக்குநரகம் அறிவித்துள்ளது. இடஒதுக்கீடு தொடா்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து முடிப்பதற்குள், கலந்தாய்வு நிறைவடைந்துவிடும். இது மனுதாரா்களுக்கு நீதி கிடைப்பதை பாதிக்கும்’’ என்றாா்.

அதையடுத்து மத்திய அரசு சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ் கூறுகையில், ‘‘கலந்தாய்வு திட்டமிட்டபடி நடைபெற்றால் மாணவா்கள் கடும் பாதிப்பை எதிா்கொள்வா். இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும் வரை கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்காது’’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், ‘‘நிலுவையில் உள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து தீா்ப்பளிக்கும் வரை கலந்தாய்வு நடைபெறாது’’ என்றனா்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக ரூ.8 லட்சம் ஆண்டு வருமான வரம்பு எதனடிப்படையில் நிா்ணயிக்கப்பட்டது என்று மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கோரியுள்ளது. அந்த வருமான உச்சவரம்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு விரும்புகிா இல்லையா, உச்சவரம்பை நிா்ணயித்ததில் முறையான காரணங்கள் இல்லையென்றால் அந்த உச்சவரம்பை நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா ஆகியவை குறித்து மத்திய அரசு வரும் 28-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →