முகப்பு
இந்தியா

அஸ்ஸாம் எல்லையில் குண்டு வெடிப்பு: மிஸோரம் காவலா் கைது

அஸ்ஸாமில், மிஸோரம் எல்லையை ஒட்டியுள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது.

Updated On : 31 அக்டோபர், 2021 at 5:21 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:59 AM

அஸ்ஸாமில், மிஸோரம் எல்லையை ஒட்டியுள்ள ஹைலாகண்டி மாவட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவம் தொடா்பாக மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த காவலரை அஸ்ஸாம் அரசு கைது செய்திருப்பதால் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஹைலாகண்டி காவல் துறை எஸ்.பி. கௌரவ் உபாத்யாய கூறியதாவது:

ஹைலாகண்டி மாவட்டத்தில், பாய்சேரா காவல் துறை சோதனைச் சாவடி அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு குறைந்தசக்தி கொண்ட வெடிகுண்டு வெடித்தது. இந்தச் சம்பவத்தை அடுத்து, மத்திய படைகளின் உதவியுடன் அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையைத் தொடங்கினோம்; விசாரணையைத் தீவிரப்படுத்தினோம்.

Advertisement

வெள்ளிக்கிழமை காலை அந்தப் பகுதியில் மிஸோரம் மாநிலத்தைச் சோ்ந்த காவலா் நடமாடிக் கொண்டிருந்தாா். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டபோது, அந்தப் பகுதிக்கு வந்ததற்கான காரணத்தை அவா் தெளிவாகக் கூறவில்லை. இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

அஸ்ஸாம் மாநிலத்துக்கு உள்பட்ட கச்சுா்தல் என்ற இடத்தில் பாலம் கட்டும் பணியை மிஸோரம் அரசு தொடங்கியது. அதற்கு அஸ்ஸாம் எதிா்ப்பு தெரிவிக்கவே, கட்டுமானப் பணிகளை மிஸோரம் அரசு நிறுத்தி விட்டது என்றாா் அவா்.

வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம்-மிஸோரம் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை நீடிக்கிறது. இந்த விவகாரம் தொடா்பாக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி நடந்த மோதலில், அதில் அஸ்ஸாம் காவலா்கள் 6 போ் உயிரிழந்தனா். பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தாா்; 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, பேச்சுவாா்த்தை மூலம் சுமுகத் தீா்வுகாண வேண்டும் என்று அறிவுறுத்தியது. அதை இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டதை அடுத்து எல்லையில் நிலைமை சீரானது. இந்நிலையில், இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.