முகப்பு
இந்தியா

காஷ்மீர் விவகாரத்தை கையில் எடுத்த தலிபான்கள்

ஒரு இஸ்லாமியராக காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுப்பதற்கு எங்களுக்கு உரிமை உண்டு என தலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
கோப்புப்படம்
பகிர்:

தலிபான்கள் ஆட்சியில் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களை நடத்த ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படுமோ? என இந்திய கவலை தெரிவித்துவரும் நிலையில், காஷ்மீர் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க எங்களுக்கு உரிமை உண்டு என தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக போரை நடத்தும் திட்டம் இல்லை என தலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிபிசி உருதுக்கு நேர்காணல் அளித்த தலிபான் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், "ஒரு இஸ்லாமியராக காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுப்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. இஸ்லாமியர்கள் உங்களுடைய மக்கள் என குரல் கொடுப்போம். உங்களின் சட்டத்தின்படி அவர்களுக்கும் சமமான உரிமைகள் உண்டு" என்றார்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு தலிபான்கள் வெளியிட்ட கருத்துக்கும் இப்போதைய கருத்துக்கும் பெரிய முரண் உள்ளது. முன்னதாக, "காஷ்மீர் இருநாடுகள் சம்மந்தப்பட்ட உள்நாட்டு பிரச்சனை" என தலிபான்கள் தெரிவித்திருந்தனர்.

அதேபோல், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத செயல்கள் நடக்காமல் இருப்பது உறுதி செய்யப்படும் என வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

தலிபான் பிரதிநிதி ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்ஜாய் கத்தாருக்கான இந்திய தூதர் தீபக் மிட்டலை செவ்வாய்கிழமை தோஹாவில் சந்தித்து பேசினார். தலிபான்களுடன் மேற்கொள்ளப்படும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பு இதுவாகும். அப்போதுக்கூட, இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள ஆப்கானிஸ்தான் பயன்பட்டுவிடக்கூடாது என இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.