தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. முதலிடம்
2021-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.
புது தில்லி: 2021-ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் சென்னை ஐஐடி ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியல் பிரிவிலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இதில், பல்வேறு பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்நுட்ப நிறுவனங்கள்) முதல் 10 இடங்களைப் பெற்றுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்த தேசிய கல்வி நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (என்ஐஆர்எஃப்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2015-ஆம் ஆண்டுமுதல் கல்வி நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வியாழக்கிழமை காணொலி வழியில் வெளியிட்டார். கல்வித் துறை இணையமைச்சர்கள் அன்னபூர்ணா தேவி, டாக்டர் சுபாஷ் சர்க்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் ஆகியோரும் பங்கேற்று தரவரிசைப் பட்டியலை வெளியிட்டனர்.
ஒட்டுமொத்தப் பிரிவிலும், பொறியியலிலும் சென்னை ஐஐடி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது. பல்கலைக்கழகப் பிரிவிலும், ஆராய்ச்சி நிறுவனப் பிரிவிலும் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்) முதலிடம் பெற்றுள்ளது. பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் கோவை அமிர்தா விஷ்வ வித்யா பீடம் மூன்றாவது இடத்தையும், திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 9 -ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. மேலாண்மைப் பிரிவில்ஆமதாபாத் ஐஐஎம் முதலிடத்தில் வந்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் தில்லி எய்ம்ஸ் முதலிடம்: கல்லூரிகள் பிரிவில் முதல், இரண்டாம் இடங்களை முறையே தில்லியின் மிரண்டா ஹவுஸ், லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி பெற்றுள்ளன. மூன்றாம் இடத்தில் சென்னை லயோலா கல்லூரியும், ஆறாவது, ஏழாவது இடங்கள் முறையே கோவை பிஎஸ்ஜி, ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மருத்துவக் கல்லூரியில் நான்காவது முறையாக தில்லி எய்ம்ஸ் முதலிடத்தைப் பெற்றது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (சிஎம்சி) 3-ஆவது இடம் பெற்றுள்ளது. பல் மருத்துவத்தில் சென்னை சவிதா இன்ஸ்டிடியூட் மருத்துவத் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.
முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆராய்ச்சி நிறுவனப் பிரிவில் பெங்களூரு ஐஐஎஸ் முதலிடமும், சென்னை ஐஐடி 2-ஆம் இடமும் பெற்றுள்ளன. மற்ற பிரிவுகளில் மருந்தியலில் தொடர்ந்து நான்காவது முறையாக ஜாமியா ஹம்தார்த்தும், கட்டடவியலில் ஐஐடி ரூர்கி, சட்டப் படிப்பில் தொடர்ந்து நான்காவது முறையாக பெங்களூரு தேசிய சட்டப் பள்ளி ஆகியவை முதலிடத்தில் உள்னன.
இந்தத் தரவரிசையில் பல்வேறு பிரிவுகளில் முதல் 10 இடங்களில் தமிழக நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், தமிழகத்தைச் சேர்ந்த 44 தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் தரவரிசைப்பட்டியலில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளன.
அமைச்சர் வேண்டுகோள்: நிகழ்ச்சியில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: இந்த 21-ஆம் நூற்றாண்டில் என்ன தகுதியுள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கின்றோம் என்பதைத் தெரிந்துகொள்வதை விரும்புகின்றனர். நாட்டில் 50 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. 5 கோடி மாணவர்கள் உயர் கல்வி கற்கின்றனர். ஆனால், இந்தத் தரவரிசைப் பட்டியல் தேர்வில் 6 ஆயிரம் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள்தான் பங்கெடுத்துள்ளன; இது அதிகரிக்கப்பட வேண்டும். பொருளாதார நிலைமையால் பெரும்பாலானவர்கள் பங்கேற்கவில்லை.
பிராந்திய தரவரிசைப் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும். இந்தத் தரவரிசை பட்டியல் சர்வதேச கற்றல் துறைக்கான இந்தியாவின் பங்களிப்புக்கு முன்னுதாரணமாகத் திகழும்; நாட்டுக்கு மட்டுமல்லாமல் சர்வதேசத்துக்கும் அளவுகோலாக இருக்கும். நமது மாணவர்களில் 5 லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கின்றனர். அதிக செலவு செய்து செல்கின்றனர். இது பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. இதனால், வெளிநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் உயர்கல்விச் செயலர் அமித் கரே, பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் பேராசிரியர் டி.பி. சிங், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் பேராசிரியர் அனில் சஹஸ்ர புத்தே, என்பிஏ தலைவர் பேராசிரியர் கே.கே. அகர்வால், என்பிஏ உறுப்பினர்-செயலர் டாக்டர் அனில் குமார் நஸ்ஸô ஆகியோர் பங்கேற்றனர்.