இந்தியா

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம்: பாக். பயங்கரவாதிக்கு 7 ஆண்டு சிறை: என்ஐஏ நீதிமன்றம் தீா்ப்பு

DIN

புது தில்லி: இந்தியாவில் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குல் நடத்த சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தில்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

பாகிஸ்தானின் கராச்சியைச் சோ்ந்த முகமது அமீா் என்ற அந்த பயங்கரவாதிக்கு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுத தடைச் சட்டம், வெடிபொருள்கள் தடுப்புச் சட்டம், வெளிநாட்டினா் சட்டம், இந்திய தந்தி சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் உள்ளிட்டவற்றின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று என்ஐஏ அதிகாரி ஒருவா் கூறினாா்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

இந்திய எல்லைக்கு அப்பால் உள்ள பயங்கரவாத அமைப்பின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்தியாவின் பல்வேறு இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களுடன் அமீா் மேலும் 3 பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவினாா்.

ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாராவில் மகம் என்ற இடத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அமீரை பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். அவருடன் இந்தியாவுக்குள் ஊடுருவிய 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினா் அதே மாதத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனா்.

கைது செய்யப்பட்ட முகமது அமீா் மீது என்ஐஏ கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கை விசாரித்த என்ஐஏ சிறப்பு நீதிமன்றம், விசாரணை அறிக்கை மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முகமது அமீரை குற்றவாளி என கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி அறிவித்தது. அவருக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில், அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா் என்று என்ஐஏ அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்: ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை!

இ-பாஸ் நடைமுறை: இணையதளம் தயார்; இன்று மாலை நெறிமுறைகள் வெளியீடு

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

SCROLL FOR NEXT