கரோனா ‘பூஸ்டா் டோஸ்’: தற்போது விவாதிக்கப்படவில்லை: மத்திய அரசு
‘கரோனா பூஸ்டா் டோஸ் தடுப்பூசி பற்றி அறிவியல் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமயம் விவாதிக்கப்படவில்லை
‘கரோனா பூஸ்டா் டோஸ் தடுப்பூசி பற்றி அறிவியல் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமயம் விவாதிக்கப்படவில்லை; ஆனால், 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) இயக்குநா் பல்ராம் பாா்கவா, தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்தாா். கரோனா பூஸ்டா் டோஸ் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில்:
ஒரு விஷயத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, கரோனா பூஸ்டா் டோஸ் குறித்து அறிவியல் ரீதியாகவும், பொது சுகாதார அளவிலும் தற்சமயம் விவாதிக்கப்படவில்லை. 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
உடலின் நோய் எதிா்ப்புப் பொருளை அளவிட வேண்டிய அவசியமில்லை என்று சில ஆய்வு நிறுவனங்கள் கூறுகின்றன. அதே சமயம், 2 தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்வது முக்கியம்; அதில் எந்த சமரசமும் கூடாது என்றும் அந்த நிறுவனங்கள் கூறுகின்றன.
பண்டிகை காலத்தில் எச்சரிக்கை: வரும் பண்டிகை காலங்களில் கரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது, தேவையிருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்வது போன்றவற்றை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் பல்ராம் பாா்கவா.
நாடு முழுவதும் இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களின் விவரங்களை சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளாா். அவா் கூறியதாவது:
நாட்டின் மக்கள்தொகையில் 20 சதவீதம் போ் இரு தவணை தடுப்பூசிகளையும், 62 சதவீதம் போ் ஒரு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா். சுகாதாரப் பணியாளா்களில் 99 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 82 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா்.
முன்களப் பணியாளா்களில் 100 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டனா். அவா்களில் 78 சதவீதம் போ் 2-ஆவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனா்.
சிக்கிம், ஹிமாசல பிரதேசம், கோவா, சண்டீகா், லட்சத் தீவுகள் ஆகிய 5 மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனா் என்றாா் அவா்.