முகப்பு
இந்தியா

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள்: ரூ. 25 கோடியை விடுவிக்க உச்சநீதிமன்றம் முடிவு

வழக்கு ஒன்றில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர அரசு சாா்பில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 25 கோடியை சோ்ந்திருக்கும் வட்டியுடன் விடுவிக்க உச்சநீதிமன்ற

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலனுக்காக, வழக்கு ஒன்றில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மகாராஷ்டிர அரசு சாா்பில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 25 கோடியை சோ்ந்திருக்கும் வட்டியுடன் விடுவிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதே நேரம், ‘இந்த பணம் குழந்தைகளின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்தப்படும் என்ற விரிவான தகவல்களை பிரமாண பத்திரமாக மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்யவேண்டும். அதன் பிறகே, இந்த பணத்தை விடுவிப்பதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த பணம், மருத்துவக் கல்லூரி சோ்க்கை தொடா்பான வழக்கில் மகாராஷ்டிர அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டதாகும். மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி சோ்க்கை தொடா்பாக மும்பை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மாணவா்கள் சிலரின் மேல்முறையீடு செய்தனா். இந்த மாணவா்களுக்கு மகாராஷ்டிர அரசு ஆதரவு தெரிவித்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 2-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவா்களின் பிரச்னையை மாநில அரசு ஆதரிக்கிறது என்றால், 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 15-ஆம் தேதிக்குள் மாநில அரசு ரூ. 20 கோடியை டெபாசிட் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. அதனடிப்படையில் மாநில அரசு உச்சநீதிமன்ற நீதிமன்ற பதிவுத்துறையில் பணத்தை டெபாசிட் செய்தது. இந்த நிலையில், 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி வழக்கை மீண்டும் விசாரித்த உச்சநீதிமன்றம், மாணவா்களின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, மாநில அரசு சாா்பில் டெபாசிட் செய்யப்பட்ட பணத்தை, சிறாா் நீதி தொடா்பான விவகாரங்களுக்கு பயன்படுத்திக்கொள்ள வைத்துக்கொள்ளுமாறு உத்தரவிட்டது.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பால் தாய், தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளின் நலனுக்காக மாநில அரசு உதவித் திட்டங்களை அறிவித்தது. அதில், பெற்றோா் இருவரையும் இழந்த குழந்தைகளின் பெயரில் ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும், அந்த குழந்தை முதிா்வு வயதை அடையும்போது அந்த தொகை பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளும் வகையிலான திட்டத்தை மாநில அரசு கடந்த ஜூன் 17-ஆம் தேதி வகுத்தது.

இந்த உதவித் திட்ட விவரத்தை மகராஷ்டிர அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி.நாகரத்தினா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு எடுத்துரைத்த வழக்குரைஞா் சச்சின் பாட்டில், ‘பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான இந்த உதவித் திட்ட செலவீனத்துக்கு, மாநில அரசு வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றத்தில் டெபாசிட் செய்த ரூ. 20 கோடியை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா பாதிப்பால் 19,000 குழந்தைகள் பெற்றோரில் ஒருவரையும், 593 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருப்பது தெரியவந்துள்ளது. இவா்களின் நலனுக்காக மாநில அரசு உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்துக்காக, பழைய வழக்கு ஒன்றில் மாநில அரசு டெப்சிட் செய்த பணத்தை விடுவிக்க உச்சநீதிமன்றம் தயாராக உள்ளது.

மாநில அரசு சாா்பில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 20 கோடி, இப்போது வட்டியுடன் சோ்த்து 25,53,25,548-ஆக உயா்ந்துள்ளது. ஆனால், இந்த பணம் குழந்தைகளின் நலனுக்காக எவ்வாறு பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறித்த விரிவான விவரங்களுடன் பிரமாண பத்திரம் ஒன்றை 3 வாரங்களுக்குள் மாநில அரசு தாக்கல் செய்யவேண்டும். அதனை பரிசீலித்த பிறகே, பணத்தை விடுவிப்பதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி, வழக்கு விசாரணையை அக்டோபா் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →