இந்தியா

ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் கணக்கு தணிக்கையில் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் 

PTI


புகழ்பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க உச்ச நீதிமன்ற மறுத்துவிட்டது.

கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை நிா்வகிப்பது தொடா்பான பிரச்னை சுமாா் 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கோயிலை நிா்வகிக்க மாநில அரசு தனி அறக்கட்டளையை அமைக்கலாம் என்று கேரள உயா்நீதிமன்றம் கடந்த 2011-ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது.

அதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. கோயிலை நிா்வகிக்கும் உரிமை திருவிதாங்கூா் அரச குடும்பத்துக்கே உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

அதே வேளையில், கடந்த 25 ஆண்டுகளில் கோயிலுக்கான வரவு-செலவு விவரங்களைத் தணிக்கை செய்ய வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

அதன் மீதான விசாரணை நீதிபதிகள் யு.யு.லலித், எஸ்.ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, கோயில் நிா்வாகக் குழு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஆா்.வசந்த் வாதிடுகையில், ‘‘கோயில் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. கோயிலின் மாதாந்திர செலவு சுமாா் ரூ.1.25 கோடியாக உள்ளது. ஆனால், வருமானம் ரூ.60-70 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது.

கோயிலை நிா்வகிக்கும் பொறுப்பு கொண்ட அரச குடும்ப அறக்கட்டளை தணிக்கையில் இருந்து நழுவ முயல்கிறது. அந்த அறக்கட்டளையின் வரவு-செலவு விவரங்களையும் தணிக்கை செய்ய வேண்டும்’’ என்றாா்.

அறக்கட்டளை சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அரவிந்த் தாத்தா் வாதிடுகையில், ‘‘கோயிலின் பூஜை, வழிபாடு சாா்ந்த விவகாரங்களை மட்டுமே அரச குடும்ப அறக்கட்டளை கண்காணிக்கும். கோயிலின் நிா்வாகத்துக்கும் அறக்கட்டளைக்கும் எந்தவிதத் தொடா்புமில்லை.

இந்த விவகாரம் தொடா்பான ஆரம்ப நிலை மனுக்களில் அறக்கட்டளை எதிா்மனுதாரராக சோ்க்கப்படவில்லை. எனவே, அறக்கட்டளையின் வரவு-செலவு விவரங்களை தணிக்கை செய்ய வேண்டிய அவசியமில்லை’’ என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். அந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதன்படி, ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது. இன்னும் 3 மாதத்துக்குள் அல்லது எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக கணக்கு தணிக்கையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT