அடுத்தாண்டு தொடக்கத்தில், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேளாண் திருத்த சட்டங்கள் திரும்பபெறப்பட்டதால், அம்மாநிலத்தில் கணிசமான இடங்களில் வெற்றிபெற பாஜக திட்டமிட்டுவருகிறது.
அக்கட்சிக்கு பலம் சேர்க்கும் வகையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ள அமரீந்தர் சிங், பாஜகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தன்று, பிரதமர் மோடி பஞ்சாபில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ளார். பல ஆண்டுகளாகவே, பெரிய கட்சியுடன் கூட்டணி அமைத்து குறைவான இடங்களிலேயே அக்கட்சி போட்டியிட்டுவருகிறது.
இதனிடையே, உத்தரப் பிரதேசத்திற்கு அறிவித்தது போலவே பஞ்சாப்புக்கும் பல நல திட்டங்களை மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது. திட்டங்கள் மற்றும் பயனாளர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதன் அடிப்படையிலேயே பாஜக வாக்காளர்களை கவரும் முயற்சியில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிக்க | இரண்டு மாதங்களுக்கு பின்னர் உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
'பாஜகவிடம் புதிய பஞ்சாப்' என்ற முழக்கத்துடன் தேர்தல் களத்தில் குதிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. காலம் காலமாகவே, அகாலி தள கட்சியுடனேயே பாஜக கூட்டணி அமைத்துவந்தது. ஆனால், இம்முறை, முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், அகாளி தள கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி தொடங்கியுள்ள சுக்தேவ் சிங் ஆகியோருடன் இணைந்து, அதிக இடங்களில் போட்டியிட பாஜக திட்டமிட்டுள்ளது.
"பஞ்சாபில் அடுத்த அமையவிருக்கும் அரசு பாஜகவின் துணை இல்லாமல் அமையக்கூடாது" என பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 70 இடங்களில் போட்டியிட பாஜக விரும்புகிறது. அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 35 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.