தமிழக மீனவர்களைப் பாதுகாக்க கச்சத் தீவை மீட்க வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை வலியுறுத்தல்
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகியுள்ளதால், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத் தீவை மீட்க வேண்டும்
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் தொடர்ந்து கேள்விக்குறியாகியுள்ளதால், இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத் தீவை மீட்க வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் தம்பிதுரை புதன்கிழமை வலியுறுத்தினார்.
மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் அவர் பேசியதாவது:
தமிழக மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க கச்சத்தீவு பிரச்னைக்குத் தீர்வு காண மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன். 1974-ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை கடல்சார் ஒப்பந்தத்தின் கீழ், கச்சத்தீவு ஒருதலைப்பட்சமாக இலங்கைக்கு இந்தியா வழங்கியது. அப்போது முதல் தமிழக மீனவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. பலமுறை நமது மீனவர்களை இலங்கை கடற்படையினர் கொடூரமாகத் தாக்கி கைது செய்து இலங்கைச் சிறையில் அடைத்தனர்.
இதற்கு முடிவு ஏற்படுத்தும் விதமாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்க, இந்தியா - இலங்கை கடல்சார் ஒப்பந்தம் சட்டவிரோதம் என அறிவிக்கக் கோரி 2008 -இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், மத்திய அரசின் தொடர்ச்சியான உறுதிமொழிகள், இலங்கையுடனான தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும், இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தடுக்கப்படவில்லை. இந்தியா -இலங்கை ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்கும் விதிகள் இருந்தும், இலங்கை கடற்படை ஒருதலைப்பட்சமாக இருதரப்பு நடவடிக்கைகளையும் ரத்து செய்தது. எனவே, மத்திய அரசு இலங்கை அரசுடனான 1974- ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்திய எல்லைக்குள் இருக்கும் கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார் அவர். இந்தக் கோரிக்கைக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்ஜிஆர் சிலை: மறைந்த முதல்வர் எம்ஜிஆருக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிலை வைக்க அனுமதி கோரி மத்திய அரசை கேட்டுக் கொண்டு சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக உறுப்பினர் தம்பிதுரை பேசினார். அவர் பேசியதாவது:
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வராக இருந்து மிகவும் மரியாதைக்குரியவராக இருந்தார். அவருக்கு மரியாதை கொடுப்பது என்பது உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகும்.
முன்பு அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை "சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையம்' என பெயர் மாற்றம் செய்தார். இப்போது, அங்கு பொருத்தமாக சிலை இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்தை சரியாக அலங்கரிக்கும். ஏற்கெனவே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அவரது சிலையை சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நுழைவு வாயிலில் நிறுவுவதற்கு தேவையான அனுமதிக்கு தடையில்லா சான்றிதழை ரயில்வே அமைச்சகம் மூலம் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.